மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியது குறித்து கருத்து தெரிவித்த சரத்பவார், ‛வருமான வரித்துறை தமக்கு லவ் லெட்டர் அனுப்பியுள்ளது' என கிண்டலாக தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், 2004, 2009, 2014, 2020 தேர்தல்களில் சரத்பவார் போட்டியிட்டபோது தேர்தல் ஆணையத்திடம் அவர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க சரத்பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து சரத்பவார் தெரிவித்துள்ளதாவது: அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை ஏஜென்சிகள் எதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்பது வெளிப்படையாகவே இப்போதெல்லாம் தெரிந்து விடுகிறது. மஹாராஷ்டிரா எம்.எல்.ஏ.,க்கள் பலருக்கும் மத்திய விசாரணை ஏஜென்சிகள் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றன. இந்த புதிய அணுகுமுறையை தொடங்கி வைத்திருக்கிறார்கள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அமலாக்கப் பிரிவு என்றால் என்ன என்பது பொதுவாக தெரியாது. ஆனால் இப்போது நிலைமை வேறு. சாதாரண கிராமங்களில் கூட உங்களுக்குப் பின்னால் அமலாக்கப் பிரிவு இருக்கிறதா? என கிண்டலடிக்கின்றனர். பல்வேறு அரசியல் காரணங்களுக்காக நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனக்கு கூட வருமான வரித்துறையிடம் இருந்து இது போன்ற லவ் லெட்டர் வந்துள்ளது. 2004 லோக்சபா தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை வைத்து இப்போது விசாரிக்கின்றனராம். இவ்வாறு கிண்டலாக தெரிவித்துள்ளார்.