விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே, 4,000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு உலையின் தடயத்தை, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வெங்கடேஸ்வரபுரம் கிராமம் காவல்தோப்பு பேச்சியம்மன் கோவில் எதிரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு இரும்பு தாதுக்கள், இரும்பு கழிவுகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கல் சுத்தியல்களின் உடைந்த பாகங்கள் போன்றவை சிதறி கிடப்பது கண்டறியப்பட்டது.
இவை பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு உருக்கு உலையின் தடயங்கள் ஆகும்.ராஜகுரு கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்துாரை சுற்றி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் இயற்கையான இரும்பு தாதுக்கள் கிடைக்கின்றன.இதனால் இப்பகுதிகளில் பெருங்கற்கால நினைவு சின்னங்களுடன் இரும்பு உருக்கு உலையின் தடயங்களும் பல இடங்களில் காணப்படுகின்றன.இங்கு காணப்படும் தொல் பொருட்கள் மூலம், 4,000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கும் தொழிற்சாலை இவ்வூரில் இருந்திருப்பதை அறிய முடிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.