வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை : மஹாராஷ்டிரா சட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடர் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. நாளை சபாநாயகர் தேர்தல் நடக்கிறது. நாளை மறுநாள், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹாராஷ்டிராவின் புதிய முதல்வராக, சிவசேனா அதிருப்தி குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.
பெரிய மனது
துணை முதல்வராக, பா.ஜ., மூத்த தலைவர் தேவேந்திர பட்னவிஸ் பொறுப்பேற்றார். இந்நிலையில், 'சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்றும், நாளையும் நடக்கும்' என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் மாற்றம் செய்யப்பட்டு, 'நாளையும், நாளை மறுநாளும், சிறப்பு சட்டசபை கூட்டம் நடக்கும்' என, நேற்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.நாளை, புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடக்கிறது.
நாளை மறுநாள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு, சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மஹா., முதல்வராக பதவி ஏற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜ., ஆவலாக இருப்பதாக மக்கள் நினைத்தனர். பா.ஜ.,வுக்கு அதிக எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், முதல்வர் பதவியை எனக்கு வழங்க தேவேந்திர பட்னவிஸ் முடிவு செய்ததற்கு பெரிய மனது வேண்டும். இதன் வாயிலாக அவர் புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
ஏக்நாத் ஷிண்டே நேற்று முன்தினம் பதவி ஏற்ற பின், விமானம் வாயிலாக நள்ளிரவு புறப்பட்டு கோவா சென்றார். அங்கு, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு நேற்று அதிகாலை 1:30 மணிக்கு சென்றார். அங்கு, ஏக்நாத் ஷிண்டேவுக்கு எம்.எல்.ஏ.,க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்; ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தனர்.
தகுதி நீக்க வழக்கு
இதற்கிடையே, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்.எல்.ஏ.,க்களை 'சஸ்பெண்ட்' செய்யக் கோரி, சிவசேனாவின் தலைமை கொறடா சுனில் பிரபு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டது. 'வழக்கு வரும் 11ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏக்நாத் ஷிண்டே முதல்வராக அறிவிக்கப்பட்டதும், கோவா நட்சத்திர ஹோட்டலின் வரவேற்பு அறையில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் நடனமாடினர். அந்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. எம்.எல்.ஏ.,க்களின் செயல் மிகவும் அநாகரிகமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்தன. நேற்று அதிகாலை, எம்.எல்.ஏ.,க்களை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சந்தித்த போது, ''இது போன்ற அநாகரிக செயல்களில் இனி ஈடுபட வேண்டாம்,'' என எச்சரித்தார்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள 2019ல் மறுத்த பா.ஜ., இப்போது சிவசேனாவைச் சேர்ந்தவருக்கு முதல்வர் பதவியை அளித்துள்ளது. பா.ஜ., எங்களுக்கு இழைத்த துரோகத்தை போல, மும்பை மக்களுக்கும் துரோகம் இழைக்காமல் இருந்தால் சரி. இவ்வாறு அவர் கூறினார்.