வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை-பண பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக, மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று ஆஜரானார்.
![]()
|
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியை மாற்றி அமைப்பதில் நடந்த மோசடி மற்றும் அதில் நடந்துள்ள, 901 கோடி ரூபாய் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்டோர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது. இதில், ராவத்தின் மனைவி பெயரில் உள்ள, 11.15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் கடந்த ௨௮ம் தேதி ஆஜராகும்படி, சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை 'சம்மன்' அனுப்பியது.ராவத் கூடுதல் அவகாசம் கேட்டு, பதில் அனுப்பியிருந்தார். இதையடுத்து, ஜூலை 1ம் தேதி, மும்பை அலுவலகத்தில் ஆஜராகும்படி, அவருக்கு புதிய சம்மன் அனுப்பப்பட்டது.இதையடுத்து, சஞ்சய் ராவத் அமலாகத்துறை அலுவலகத்தில் நேற்று காலை ஆஜரானார். அதற்கு முன் அவர் கூறுகையில், ''எனக்கு எந்த பயமும் இல்லை. அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு, எனக்கு தெரிந்த பதிலை சொல்வேன்,'' என்றார்.
![]()
|
தொடர்ந்து, மஹாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு பற்றி கேட்டதற்கு, சஞ்சய் ராவத் கூறியதாவது:பா.ஜ., ௨௦௧௯ல், சட்டசபை தேர்தலுக்கு முன் செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி நடக்க சம்மதித்திருந்தால், இரண்டரை ஆண்டு காலம், பட்னவிசுக்கு முதல்வர் பதவி கிடைத்திருக்கும். தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை அமைக்க சிவசேனாவுக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது. சிவசேனாவிலிருந்து பிரிந்த குழு ஒன்று, பா.ஜ.,வுடன் கைகோர்த்து அரசு அமைத்துள்ளது. சிவசேனா உடையவில்லை. உத்தவ் தாக்கரே தலைமையில், அது தொடர்ந்து வலிமையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement