வேலுார்;''காவிகள் இருக்கும் இடத்தில் அன்பு, அதிகாரம், பலம் அனைத்தும் இருக்கும்,'' என, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.வேலுார் மாவட்டம், ஸ்ரீபுரம் நாராயணி மகாலில், நாராயணி பீடம், அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் பாலாறு பெருவிழா நடக்கிறது.
பெண் துறவியர் பங்கேற்ற சக்தி மாநாடு நேற்று நடந்தது.இதில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சாதனைகள் செய்த பெண் துறவிகளுக்கு சான்றிதழ், விருது வழங்கி பேசியதாவது: காவி தான் ஆன்மிகம்; ஆன்மிகம் இல்லாமல் தமிழில்லை. ஆன்மிகத்தை விடுத்து தமிழக கலாசாரம் இல்லை. காவிகள் இருக்கும் இடத்தில் அன்பு, அதிகாரம், பலம் அனைத்தும் இருக்கும்.அனைத்து மதங்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆண்டாள் கற்றுக் கொடுத்த தமிழ் தான் இன்று அனைவரின் நாவிலும் தவழ்ந்து கொண்டிருக்கிறது.ஆழ்வார்கள் இல்லாமல் தமிழ் இல்லை. ஆன்மிகமும், காவியும் சேர்ந்தது தான் தமிழகம். ஆனால், தமிழகத்திற்கும், காவிக்கும் சம்பந்தமில்லை என்ற நிலை உருவாக்க சில சக்திகள் செயல்பட நினைத்தனர்.பலம் பொருந்திய காவி துறவி பெண்களை வணங்குகிறேன். கொரோனா காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில், ஒரு கோவில் கூட மூடப்படவில்லை. வழிபாட்டுட்டுன் தான் கொரோனாவை கட்டுப்படுத்தினோம்.இதை, புதுச்சேரி மாடல் என்று கூட சொல்லலாம். அனைத்து மதத்தினரும் இறைவனை வணங்க வேண்டும். ஒரு மதம் பற்றி மற்றொரு மதத்தினர் விமர்சிக்கக் கூடாது. சிதம்பரம் நடராஜரை மோசமாக விமர்சிக்க முடியும் என்பது சுதந்திரம் இல்லை. சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதற்காக, சகிக்க முடியாத வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அதனால் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுக்க வேண்டும். எனக்கு பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் இருக்கிறார்; மத நல்லிணக்கம் என பேசுகிறார். அவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வார்; ரம்ஜானுக்கும் வாழ்த்து சொல்வார். ஆனால், தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டார்.அவரை ஆதரித்தாலும் வாழ்த்து சொல்ல மாட்டார்.
ஏனென்று கேட்டால் இதுவரை பதில் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:அனைத்து மாநிலங்களிலும் கவர்னர்கள் தன்னிச்சையாக செயல்படவில்லை. அந்தந்த மாநில அதிகாரத்துக்கு உட்பட்டு சூழ்நிலைக்கு ஏற்ப, அரசியல் சட்டத்தின்படி தான் செயல்படுகின்றனர்.நானும் அவ்வாறு தான் செயல்படுகிறேன். மற்ற மாநில கவர்னர்களும் அப்படித் தான் செயப்படுகின்றனர். கவர்னர்கள் எந்த கட்சியையும் உடைக்கவில்லை. அவர்களாகவே தங்களுக்குள் உடைத்துக் கொண்டு, கவர்னர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.