காஞ்சிபுரம்,-காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, ஐந்து ஒன்றியங்களில், 'மாஜி' மக்கள் நலப்பணியாளர்கள், 236 பேருக்கு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், வேலை உறுதி திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.ஊரக வளர்ச்சி ஊராட்சி துறையின் கீழ் பணிபுரிந்த மக்கள் நலப் பணியாளர்கள் 2011 நவ., 8ல் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை தற்போதைய அரசு, மஹாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில், ஊராட்சி அளவில், வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் பணியில் ஈடுபட வாய்ப்பு அளித்தது.இப்பணிக்கு என, மஹாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்ட நிதியில், 5 ஆயிரம் ரூபாயும், கூடுதலாக கிராம ஊராட்சி பணிகளுக்காக 2 ஆயிரத்து 500 ரூபாய் என, மொத்தம், 7 ஆயிரத்து 500 ரூபாய் மாதம் ஒன்றுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.இப்பணிக்ககாக, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார் ஆகிய ஐந்து ஒன்றியங்களிலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், 13ம் தேதி முதல், 18 வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.வரப்பெற்ற மனுக்கள் பரிசீலனை செய்து தகுதியுடைய 236 தேர்வு செய்யப்பட்டு, நேற்று சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் பணியில் சேர்ந்தனர்.