வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு பா.ஜ. மற்றும் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக இன்று(ஜூலை 2) சென்னை வருகிறார்.
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு எதிர்க் கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர். யஷ்வந்த் சின்ஹா நேற்று முன்தினம் சென்னை வந்தார். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
திரவுபதி முர்மு இன்று பகல் 1:30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து தனி விமானத்தில் மதியம் 2:00 மணிக்கு சென்னை வருகிறார். அவருக்கு பா.ஜ. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் மாலை 4:00 மணிக்கு பா.ஜ., - அ.தி.மு.க., - பா.ம.க., - த.மா.கா., உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு கோர உள்ளார். மாலை 5:00 மணிக்கு தனி விமானத்தில் சென்னையில் இருந்து டில்லி செல்கிறார்.
அ.தி.மு.க.வில் பன்னீர்செல்வம் - பழனிசாமி இடையிலான மோதல் காரணமாக இருவரையும் தனித்தனியே திரவுபதிமுர்மு சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், 'சமூக நீதி என்றால் என்ன என்பதை உலகுக்கு உணர்த்த அனைத்து எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு பழங்குடியின பெண் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஓட்டளிக்க முன் வரவேண்டும்' என, தெரிவித்துள்ளார்.