வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழக அரசு டாக்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுவதாக டாக்டர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொது செயலர் ரவீந்திரநாத் கூறியதாவது: கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஊதிய உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் 118 டாக்டர்களை பழிவாங்கும் நோக்கோடு இடமாறுதல் செய்து தண்டித்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் டாக்டர்களின் கோரிக்கை நிறைவேறும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் இதுவரை டாக்டர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை.

இதனால் விரக்தியடைந்த டாக்டர்கள் மீண்டும் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு சேலம் மாவட்டம் மேட்டூரில் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அரசு அதிகாரிகள், டாக்டர்கள் சங்கங்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கடைபிடித்து பிளவுபடுத்துகின்றனர். இவை சரியான அணுகுமுறை இல்லை.
அரசு டாக்டர்கள் அனைவரும் 2018ல் கூட்டு போராட்டக்குழு அமைத்து கையெழுத்திட்டு வழங்கிய கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அதைவிடுத்து தி.மு.க., அரசும் குழப்பம் செய்வது நியாயமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.