கோவை : பதவி உயர்வு வழங்கப்படாததால் அதிருப்தியில் இருக்கும் கோவை மண்டலத்தை சேர்ந்த, 125 கண்காணிப்பாளர்கள் நேற்று ஜி.எஸ்.டி., தின கொண்டாட்டத்தை புறக்கணித்தனர்.
அனைத்திந்திய மத்திய வரி கண்காணிப்பாளர்கள் சங்க (கோவை மண்டலம்) பொதுச்செயலாளர் தினேஷ்குமார் கூறியதாவது:ஜி.எஸ்.டி., துறையில் பதவி வாரியாக பணிகளும், பொறுப்புகளும் வரையறுக்கப்படாததால், கண்காணிப்பாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துவருகிறது. கீழ்நிலை பணியாளர்கள் இல்லாததால் நிறைய பணிகள் எங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
ஆனால், இப்பணிகளை கண்காணிப்பதற்கு மட்டும், 10 உயர்மட்ட அதிகாரிகள் நிலை உள்ளன. நாடு முழுவதும், 2,000க்கும் மேற்பட்ட உதவி கமிஷனர் பணியிடங்கள் காலியாக இருந்தும், 2007ம் ஆண்டு முதல் அகில இந்திய பணி மூப்பு பட்டியல் வெளியிடப்படவில்லை.பதவி உயர்வின்மை, பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் அதிகாரிகள் பலர் விருப்ப ஓய்வு பெற்று செல்கின்றனர்.
35 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை.இதுபோன்ற காரணங்களால், இன்றைய(நேற்று) ஜி.எஸ்.டி., தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளை, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 125 கண்காணிப்பாளர்கள் புறக்கணித்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.