தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும், கோவைக்கென நெடுஞ்சாலைத்துறை சார்பில், புதிதாக ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை; ஆனால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த, பல்வேறு திட்டங்களும் கைவிடப்பட்டு வருகின்றன.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, கோவை நகருக்கென புதிய பாலங்கள், புறவழிச்சாலைகள் என மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. இவற்றில் சில பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சில பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், கோவைக்கென புதிதாக எந்தவொரு நெடுஞ்சாலைத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே துவங்கி நடந்து வந்த விமான நிலைய விரிவாக்கம், மேற்கு புறவழிச்சாலைப் பணிகளுக்கு, நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் மாநில நெடுஞ்சாலைத்துறையிடம், கோவையிலுள்ள தொழில் மற்றும் சமூக அமைப்புகள் முன் வைத்த எந்தக் கோரிக்கையும், இதுவரை ஏற்கப்படவில்லை.
அவிநாசி ரோடு பாலம், உக்கடம் மேம்பாலம் நீட்டிப்பு, லாலி ரோடு சந்திப்பில் புதிய பாலம் ஆகியவை இதில் முக்கியமானவை.மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், கடந்த ஓராண்டில், எந்தவொரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக ஆய்வில் இருந்த பல திட்டங்கள் கைவிடப்பட்டு வருகின்றன.
மேட்டுப்பாளையம் பை-பாஸ், காரமடை மேற்கு மற்றும் கிழக்கு பை-பாஸ் ஆகிய திட்டங்கள், இதற்கு உதாரணங்கள். இவற்றில், மேட்டுப்பாளையம் பை-பாஸ் திட்டத்தை நிறைவேற்றுமாறு, தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு, தமிழக அரசு பரிந்துரைத்து விட்டது. அதேபோல, காந்திபுரம் மேம்பாலத்தில் 100 அடி ரோடு, போலீஸ் குடியிருப்பு ஆகிய இரண்டு இடங்களில் அமைப்பதாக இருந்த, இறங்குதளம் திட்டத்தையும் கைவிட உள்ளதாக, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில், தகவல் தெரிவிக்கப்படுகிறது.

கோவை - பொள்ளாச்சி இடையிலான மாற்றுப்பாதை திட்டத்தையும் கைவிடுவதற்காக, வாகன போக்குவரத்து செறிவு கணக்கெடுப்பை மாநில நெடுஞ்சாலைத்துறை நடத்தி வருகிறது. லாலி ரோடு சந்திப்பில் பாலம் கட்டுவதிலும், வேளாண் பல்கலை, வனக்கல்லுாரி இடங்களைக் கையகப்படுத்தாமலே, தொலைநோக்கின்றி பெயரளவில் ஒரு பாலம் கட்டவும் திட்டமிட்டு வருகின்றனர்.ஆக மொத்தத்தில், திட்டங்களைக் கைவிடுவதிலும், நெடுங்கால பயன்பாட்டுக்கு உதவாத வகையில் மாற்றுவதிலும்தான், இப்போதுள்ள நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.
போட்ட ரோடு மேலேயே ரோடு போட்டு, கமிஷன் மேல் கமிஷன் பார்ப்பதில் மட்டுமே, குறியாக உள்ளனர். இதற்கெல்லாம் காரணம் அதிகாரிகள்தானா, அரசும்தானா என்பதுதான் விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது.