மதுரை: திருச்சி மற்றும் திருநெல்வேலி சட்டக்கல்லுாரி மாணவியர் இருவர், 'ஆண்களை கண்டாலே எங்களுக்கு பிடிக்காது' என, கடிதம் எழுதி வைத்துவிட்டு, மதுரையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ள லாட்ஜில், 22 வயதுடைய பெண்கள் இருவர் நான்கு நாட்களாக தங்கி இருந்தனர். நேற்று காலை அறை கதவு திறக்காததால் லாட்ஜ் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.தல்லாகுளம் தீயணைப்பு அலுவலர் சுப்பிரமணியம் தலைமையில் வீரர்கள் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
மாணவியர் இருவரும் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர்.
உடனடியாக, அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
அண்ணா நகர் போலீசார் கூறியதாவது:
இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே தோழியராக உள்ளனர். பள்ளி படிப்பிற்கு பின் சட்டக்கல்லுாரியில் சேர முடிவு செய்தனர். இதில், ஒருவருக்கு திருச்சியிலும், மற்றொருவருக்கு திருநெல்வேலி சட்டக்கல்லுாரியிலும் இடம் கிடைத்துள்ளது.

இதனால், விடுமுறை நாட்களில் இருவரும் சந்தித்து பேசி வந்துள்ளனர். இதில், ஒரு மாணவிக்கு பெற்றோர் வரன் பார்க்க ஆரம்பித்த நிலையில், அதிர்ச்சியடைந்த இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து மதுரை வந்தனர்.
'ஆண்களை கண்டாலே எங்களுக்கு பிடிக்காது. நாங்கள் இறந்த பிறகு ஒரே குழியில் எங்களை அடக்கம் செய்யுங்கள்' என, கடிதம் எழுதி வைத்து விட்டு, நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்துள்ளனர்.இவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.