வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் சேரம்பாடி டான்டீ யில், பல லட்ச ரூபாய் லாபம் ஈட்டி தந்த தேயிலை தொழிற்சாலை, எலும்பு கூடாக மாறியது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1969 ல் தாயகம் திரும்பிய தமிழர்களின், மறுவாழ்வு திட்டத்திற்காக, தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக்கழகம்( டான்டீ) துவக்கப்பட்டது. தேயிலை தூள் தயாரிக்க தேயிலை தொழிற்சாலைகள் கட்டப்பட்ட நிலையில், முதல் தேயிலை தொழிற்சாலையாக சேரம்பாடி டான்டீ யில், கடந்த 1984ல், அப்போதைய செய்தி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் வீரப்பன் திறந்து வைத்தார். நல்ல நிலையில் செயல்பட்டு, மாதந்தோறும் தேயிலை தூள் மூலம் பல லட்ச ரூபாய், லாபம் ஈட்டி தந்த இந்த தொழிற்சாலை, நிர்வாகத்தின் மூலம் கடந்த 2017. ல் மூடப்பட்டது.

இங்கு பறிக்கப்படும் பசுந்தேயிலை, அருகில் உள்ள டான்டீ மற்றும் குன்னூர், கோத்தகிரி பகுதி தேயிலை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தேயிலை தொழிற்சாலை, அதிகாரிகளின் அட்சியத்தினால், மூடப்பட்ட நிலையில், இயந்திரங்கள் துருப்பிடித்து நாசமடைந்தது. தளவாட பொருட்கள், இயந்திரங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டதுடன், கட்டிட மேல்கூரையும் அகற்றப்பட்டது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும், பல கோடி ரூபாய் லாபத்தையும் ஈட்டி தந்த தேயிலை தொழிற்சாலை தற்போது, எலும்புக்கூடாக மாறி, வனவிலங்குகளின் புகலிடமாக மாறியுள்ளது. இதுபோன்ற அரசு தேயிலை தொழிசாலைகளை மூடுவதை தவிர்த்து, தொடர்ந்து செயல்படுத்திட முன்வர வேண்டும் என்று தேயிலை தொழிலை சார்ந்த விவசாயிகளும், தொழிலாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எம். எல். ஏ. ஜெயசீலன் கூறுகையில், டான்டீ நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகளால் நல்ல நிலையில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை மூடுவதை கைவிட வேண்டும். டான்டீயில் போதிய பசுந்தேயிலை கிடைக்காவிட்டாலும், வெளியில் தேயிலை விவசாயிகளிடம் பசுந்தேயிலை கொள்முதல் செய்து, தரமான தேயிலைத்தூளை தயாரிக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.