வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மகனின் திருமணத்துக்கு வந்த மொய் பணத்தை உண்டியல் வைத்து வசூல் செய்து, அப்பணத்தை மாற்றுத்திறனாளிகள், முதியோர் காப்பகத்துக்கு வழங்கிய ஓய்வுபெற்ற நூலகருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
மயிலாடுதுறை திருவிழந்தூர் தென்னமரச்சாலையில் வசிப்பவர் ஓய்வுபெற்ற நூலகர் ஜெயக்குமார். இவரது மகன் சம்பத்குமாருக்கும், காந்திமதி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் 9-ஆம் தேதி மயிலாடுதுறையில் திருமணம் நடைபெற்றது. திருமண அழைப்பிதழிலேயே, அன்பளிப்பைத் தவிர்த்து, அதனை ஏழை, எளிய மக்களுக்கு நலஉதவிகள் செய்திட ஜெயக்குமார் வலியுறுத்தியிருந்தார். இருப்பினும் அன்பின் காரணமாக மொய் அளித்தவர்களை மறுக்க முடியாததால், திருமண மண்டபத்திலேயே உண்டியல் ஒன்றை வைத்து, மொய் பணத்தை அந்த உண்டியலில் செலுத்த கேட்டுக்கொண்டார். அந்த வகையில் வசூலான ரூ.83,000 ரொக்கப்பணத்துடன், மேலும் சிறிது தொகையை சேர்த்து ரூ.1 லட்சத்தை மயிலாடுதுறையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் காப்பகம், முதியோர் காப்பகம் மற்றும் வயதான ஏழை மக்கள் ஆகியோருக்கு அவர் இன்று பிரித்து வழங்கினார்.
மகனின் திருமணத்துக்கு பெண் வீட்டாரிடமும் வரதட்சணை பெற்றுக்கொள்ளாத நூலகர் ஜெயக்குமார் குடும்பத்தினர், மொய் பணமாக வந்த தொகையினையும் சமூக சேவை அமைப்புகளுக்கு வழங்கிய செயல் அனைவரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது.