கடந்த 6 மாதத்தில் தமிழ் சினிமா : சாதித்தவை எவை, சறுக்கியவை எவை| Dinamalar

கடந்த 6 மாதத்தில் தமிழ் சினிமா : சாதித்தவை எவை, சறுக்கியவை எவை

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (3) | |
சென்னை : நடப்பு 2022ம் ஆண்டில் அரையாண்டு நிறைவடைந்துவிட்டது. இந்தக்காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 65 படங்கள் வரை வெளியாகி உள்ளன. கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக களையிழந்த தமிழ் சினிமாவிற்கு இந்த அரையாண்டு வரை எப்படி இருந்தது, எத்தனை படங்கள் சாதித்து வசூலை தந்தன, எவையவை சறுக்கின என சற்றே திரும்பி பார்ப்போம்...2022ம் ஆண்டு கொரோனா ஒமிக்ரான் தாக்கத்தால்
Tamilcinema2022, Vikrammovie, Valimai, Beast, Donmovie,

சென்னை : நடப்பு 2022ம் ஆண்டில் அரையாண்டு நிறைவடைந்துவிட்டது. இந்தக்காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 65 படங்கள் வரை வெளியாகி உள்ளன. கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக களையிழந்த தமிழ் சினிமாவிற்கு இந்த அரையாண்டு வரை எப்படி இருந்தது, எத்தனை படங்கள் சாதித்து வசூலை தந்தன, எவையவை சறுக்கின என சற்றே திரும்பி பார்ப்போம்...

2022ம் ஆண்டு கொரோனா ஒமிக்ரான் தாக்கத்தால் தியேட்டர்களில் ஜனவரி மாதம் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதனால், அப்போது வெளியாக வேண்டிய புதிய படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டது. இருந்தாலும் பரவாயில்லை என சில சிறிய பட்ஜெட் படங்கள் 50 சதவீத இருக்கைகளிலேயே வெளியாகின. ஆனாலும், ஜனவரி மாதம் வெளிவந்த எந்தப் படமும் வெற்றி பெறவில்லை.


latest tamil news
ஓரளவிற்குப் பெரிய படமாக விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' பிப்ரவரி 4ம் தேதி வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. பிப்.11ம் தேதி வெளியான 'எப்ஐஆர்' மட்டுமே சுமாரான வசூலைப் பெற்று முதல் வெற்றியைப் பதிவு செய்தது.


முதல் பெரிய வெற்றி


பிப்.24ம் தேதி அஜித் நடித்து வெளிவந்த 'வலிமை', 200 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்று இந்த ஆண்டின் முதல் பெரிய வெற்றிக் கணக்கை ஆரம்பித்து வைத்தது.

அதன் பிறகு மார்ச் மாதம் வெளிவந்த படங்களில் சூர்யா நடித்து வெளிவந்த 'எதற்கும் துணிந்தவன்' முக்கியமான படமாக இருந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த வசூலையும் விமர்சனத்தையும் பெறவில்லை. இருப்பினும் இந்தப் படத்தை வசூல் படம் என்று சொல்கிறார்கள், அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.


latest tamil news


Advertisement
கடும் விமர்சனம்... ஆனாலும் வசூல்


அதற்கடுத்து ஏப்ரல் மாதம் வெளிவந்த படங்களில் விஜய் நடித்த 'பீஸ்ட்' பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தப் படம் பெரிய வசூலைக் கொடுத்த படம் என்று செய்திகள் பரப்பப்பட்டாலும் குறிப்பிடத்தக்க லாபத்தைத் தரவில்லை என்றுதான் கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். படம் வசூல் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெறாத ஒரு படமாக 'பீஸ்ட்' இருந்தது.

அம்மாதத்தில் வெளிவந்த மற்றொரு படமான விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் 50 கோடி வரை வசூலித்து வியாபார ரீதியாக ஓரளவிற்கு லாபம் தந்த படமாக அமைந்தது.


latest tamil news

டான் தந்த வெற்றி


மே மாதத்தில் வெளிவந்த படங்களில் சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்து ஆச்சரியப்பட வைத்தது. விமர்சன ரீதியாக சுமாரான படம் என்று குறிப்பிடப்பட்ட ஒரு படம் இந்த அளவிற்கு வசூலைக் குவித்ததுதான் அந்த ஆச்சரியத்திற்குக் காரணம். அதே மாதத்தில் வெளிவந்த உதயநிதி ஸ்டாலின் நடித்த 'நெஞ்சுக்கு நீதி' படமும் ஓரளவிற்கு லாபமான படமாக அமைந்து, விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது.


மீண்டும் கமல் ராஜ்ஜியம்


ஜுன் மாதம் தமிழ் சினிமாவிற்கு ஒரு முக்கியமான மாதமாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குக் காரணம் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படம். தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளிவந்த படங்களில் அதிகமான லாபத்தைக் கொடுத்த முதல் படம் என்ற சாதனையை இந்தப் படம் படைத்தது. தென்னிந்திய அளவில் வெற்றிப் படமாக அமைந்து 400 கோடி வசூலைக் கடந்துள்ளது.


latest tamil news
கடந்த ஆறு மாதங்களில் தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படமாக கன்னடத்திலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வந்த 'கேஜிஎப் 2' படம் சாதனை புரிந்திருந்தது. அந்த சாதனையையும் 'விக்ரம்' முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். 'கேஜிஎப் 2' படத்திற்கு முன்பாக தெலுங்கிலிருந்து டப்பிங் ஆகி வந்த 'ஆர்ஆர்ஆர்' படமும் தமிழகத்தில் நல்ல வசூலைப் பெற்றது.


வசூலை அள்ளிய டப்பிங் படங்கள்


நேரடிப் படங்கள் கூடப் பெறாத வசூல் சாதனையை டப்பிங் படங்களான 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்கள் பெற்றது தமிழ்ப் படங்களுக்கு ஒரு சோதனையாகவே இருந்தது. அந்த சோதனையை தனது சாதனையால் தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவை மீள வைத்தது 'விக்ரம்'.


latest tamil news
கடந்து போன இந்த அரையாண்டில் சுமார் 65 படங்கள் வரை தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. அவற்றில் வெற்றி, சுமாரான வெற்றி என்று சொல்லும் விதமாக “எப்ஐஆர், வலிமை, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம், வீட்ல விசேஷம்” ஆகிய படங்கள்தான் உள்ளன.


ஓடிடியில் வெளியான படங்கள்


இந்த ஆண்டில் ஓடிடியில் சுமார் 16 படங்கள் வரை நேரடியாக வெளியாகி உள்ளன. அவற்றில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் நடித்த 'மகான்' படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. மற்றொரு முக்கிய படமான தனுஷ் நடித்த 'மாறன்' படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. விக்ரம் பிரபு நடித்த 'டாணாக்காரன்' படம் பேசப்பட்ட படங்களில் ஒன்றாக அமைந்தது. செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் நடித்த 'சாணி காயிதம்' படம் அதன் வன்முறைக் களத்தால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. நயன்தாரா நடித்து வெளிவந்த 'ஓ 2' படம் ஏமாற்றத்தை மட்டுமே தந்தது.


latest tamil news
2020, 2021ம் ஆண்டுகள் கொரோனா தாக்கத்தால் திரையுலகத்திற்குப் பெரிதும் பாதிப்பைத் தந்தது. 2022ம் ஆண்டு அதிலிருந்து மீளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருடத்தின் ஆரம்பமே கொரானோவால் பாதிப்படைந்தாலும் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டது.

கடந்த ஆறு மாதங்களில் 65 படங்கள்தான் வெளிவந்தாலும் அடுத்த ஆற மாதங்களில் 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் சில முக்கிய படங்களும் இருக்கின்றன. அவை வியாபார ரீதியாக நல்ல வசூலைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் இப்போதே உள்ளது. அதை நம் தமிழ்த் திரையுலகம் ஏமாற்றாமல் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X