தமிழகத்திற்கு ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கஞ்சா வருவதை தடுக்கும் வகையில் ரயில்வே போலீசார் உடன் இணைந்து மோப்பநாய் உதவியுடன் கஞ்சாவை பறிமுதல் செய்வதற்காக மோப்ப நாய்க்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என திருநெல்வேலியில் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு இன்று தெரிவித்தார்.
திருநெல்வேலி தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் திருநெல்வேலி மாநகர் காவல்துறை அலுவலகத்தில் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தென் மண்டல ஐ.ஜி. ஆஸ்ரா கர்க், திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர் அவினாஷ் குமார், நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார், நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன், தென்காசி மாவட்ட எஸ்பி கிருஷ்ணராஜ், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் பாலாஜி சரவணன், கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஹரி கிரண் பிரசாத், நெல்லை மாநகர காவல் துறை கிழக்கு துணை ஆணையர் சீனிவாசன், தலைமையிட துணை ஆணையர் அனிதா நெல்லை மாநகர மேற்கு துணை ஆணையர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகர காவல் அலுவலகத்திற்கு வந்த தமிழக காவல்துறை இயக்குனருக்கு நெல்லை மாநகர காவல் துறை அலுவலகத்தில் காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்டார்.அதன் பிறகு நெல்லை தூத்துக்குடி தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட 68 சான்றிதழ் காவலர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது தமிழகத்தில் கஞ்சா மற்றும் கந்து வட்டியை ஒழிப்பதற்காக புதிய ஆபரேஷன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தியவர்கள் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன தமிழகத்தில் கந்து வட்டிக்கு இதுவரை 238 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 171 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது சொத்துக்களை முடக்க முயற்சி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கஞ்சா எங்கும் உற்பத்தி செய்யப்படவில்லை. தேனி மாவட்டம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த காலங்களில் பயிரிடப் பட்டது.ஆனால் தற்போது அந்த பகுதியில் கஞ்சா பயிரிடப் படவில்லை. மேலும் வெளி மாநிலமான ஆந்திரா ஒடிசா மாநிலங்களில் இருந்து அதிகமான கஞ்சா தமிழகத்திற்கு ரயில் மூலம் வந்து கொண்டிருக்கிறது.
இதனை கண்டுபிடிப்பதற்காக ரயில்வே துறையுடன் இணைந்து கஞ்சாவை கண்டுபிடிப்பதற்கு மோப்ப நாயை பயன்படுத்த உள்ளோம் அந்த மோப்ப நாய்க்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை கோவை சேலம் ஆகிய இடங்களில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.