சென்னை:தமிழகத்தில், லாட்டரி மார்ட்டின், சரவணா கோல்டு பேலஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான,408 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. வங்கிக் கடன் மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, மத்திய அமலாக்கத் துறைஇந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
சென்னை தி.நகரில் இயங்கி வந்த 'சரவணா கோல்டு பேலஸ்' நிறுவனம், 2017ல் இந்தியன்வங்கி கிளையில், 240 கோடி ரூபாய் கடன் பெற்றது.
இந்த கடனைப் பெற, தவறான நிதிநிலை அடங்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு முறை கேட்டில் ஈடுபட்டதாக, இந்தியன் வங்கியின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கே.எல்.குப்தா, சி.பி.ஐ.,யில் புகார் அளித்தார்.அதன்படி, சரவணா ஸ்டோர்ஸ் பங்குதாரர்கள் சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவண் ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீதும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்தியன் வங்கியில் அந்நிறுவனம் பெற்ற கடன் தொகை, வட்டியுடன் சேர்த்து, 480 கோடி ரூபாயாக அதிகரித்தது. இதையடுத்து, இந்தியன் வங்கி தரப்பில், சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், அந்நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு கடைகளின் பொருட்களை ஜப்தி செய்து, கடைகளுக்கு 'சீல்' வைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, ஜனவரியில் இரண்டு கடைகளுக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில், அமலாக்கத்துறை விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சரவணா கோல்டு பேலஸ் நிறுவனத்துக்கு சொந்த மான, 234.75 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை, அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
லாட்டரி நிறுவனம்
அதேபோல், தமிழகத்தில் லாட்டரி விற்பனையில் உச்சத்தில் இருந்தவர், கோவையைச் சேர்ந்த மார்ட்டின். லாட்டரி விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்த பின், கேரளா, கோல்கட்டாவில் அதிகளவில் லாட்டரி விற்பனைக் கிளைகளை துவக்கி நடத்தி வருகிறார்.கடந்த 2019ல் மார்ட்டின் நிறுவனம் தொடர்புடைய இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை, கோவை, மும்பை, கோல்கட்டா, ஹைதராபாத், கவுகாத்தி, சிலிகுரி என, நாடு முழுதும் 72 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனையில், 8.25 கோடி ரூபாய் பணம்; 24.57 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம் நகைகள்; 1,214 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை, வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, 2009 - 2010ல் லாட்டரி தொழில் வாயிலாக கிடைத்த, 910 கோடி ரூபாயை மறைத்து, 40க்கு மேற்பட்ட நிறுவனங்களில் மார்ட்டின் முதலீடு செய்தது, அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்தது. மேலும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் வாயிலாக, அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதும் தெரிய வந்தது.
ரூ.258 கோடி சொத்து
இந்த மோசடி வழக்கில், மார்ட்டின் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை, அமலாக்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், 2019ல் மார்ட்டினுக்கு சொந்தமான, 258 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும், 2021ல் 19.59 கோடி ரூபாய் சொத்துக்களையும், அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.இந்நிலையில், மார்ட்டின் மற்றும் அவருக்கு தொடர்புடைய, 173.48 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை, அமலாக்கத் துறை நேற்று முடக்கியுள்ளது.