சென்னை:தேசிய ஜனநாயகக் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர், தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர்.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக,ஒடிசாவைச் சேர்ந்த திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டு உள்ளார்.
சந்திக்க ஏற்பாடு
அவர் ஒவ்வொரு மாநிலமாக சென்று, பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள்,எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோரை சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார்.அதன்படி நேற்று காலை, தனி விமானத்தில் புதுச்சேரி சென்றார்.அவரை, லாஸ்பேட்டை விமான நிலையத்தில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.
அங்குள்ள, 'அக்கார்டு' ஹோட்டலில், பா.ஜ., - என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பின், ஹோட்டலில் இருந்து புறப்பட்ட திரவுபதி முர்மு, அரவிந்தர் ஆசிரமம் சென்றார்.அங்கு, அன்னை, அரவிந்தர் சமாதிகளை தரிசனம் செய்த பின், லாஸ்பேட்டை விமான நிலையம் சென்றார். மதியம், அங்கிருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார்.
அவரை பா.ஜ., தலைவர்கள் வரவேற்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை, திரவுபதி முர்மு சந்திக்க ஏற்பாடு செய்திருந்தனர்.கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும், ஒரே நேரத்தில் சந்திக்க வைக்க, பா.ஜ., முடிவு செய்தது.அ.தி.மு.க.,வில் தற்போது நிலவும் குடுமிப்பிடி சண்டை காரணமாக, பழனிசாமி தரப்பினர், 'பன்னீர்செல்வம் வந்தால், நாங்கள் அரங்கில் இருக்க மாட்டோம்' என தெரிவித்து விட்டனர்.
மாலை 3:10 மணிக்கு பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன், ஹோட்டலுக்கு வந்தார். அவரை பா.ஜ., நிர்வாகிகள் வரவேற்று, தனி அறையில் அமரச் செய்தனர். மாலை 3:45 மணிக்கு பழனிசாமி வந்தார்; அரங்கிற்கு சென்றார்.பல கட்சிகள் ஆதரவுமாலை 4:30 மணிக்கு, திரவுபதி முர்மு வந்தார்.
மேடையில், திரவுபதி முர்மு, மத்திய இணை அமைச்சர்கள் முரளீதரன், முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சட்டசபை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் அமர்ந்தனர்.அவர்களுடன், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் முன்னாள்அமைச்சர்கள் அமர்ந்தனர். திரவுபதி முர்முவுக்கு அ.தி.மு.க., சார்பில், பழனிசாமி சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்தார். ஆதரவு தெரிவித்து பேசி முடித்ததும், தன் ஆதரவாளர்களுடன் புறப்பட்டுச் சென்றார்.
பின், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் அரங்கிற்கு வந்தார். திரவுபதி முர்முவுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்தார்; அவரை ஆதரித்து பேசினார்.அதேபோல், பா.ம.க., தலைவர் அன்புமணி, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தேவநாதன் யாதவ் ஆகியோர் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் வந்து ஆதரவு தெரிவித்தனர்.ஹோட்டலில் தனி அறையில் அமர்ந்திருந்த பா.ம.க., தலைவர் அன்புமணி மற்றும் அவர் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், பழனிசாமி வந்து சென்ற பின், அரங்கிற்குள் வந்தனர்.
ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை ஆதரித்து, பழனிசாமி பேசியதாவது:பழங்குடியின வகுப்பை சேர்ந்த திரவுபதி முர்முவை, ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த பிரதமருக்கு நன்றி.வாய் அளவில், ஏட்டளவில், மத ஒற்றுமை குறித்து பேசிய எதிர்க்கட்சிகளின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில், அப்துல் கலாமை ஜனாதிபதி வேட்பாளராக, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார்.
எதிர்க்கட்சிகள் சூழ்ச்சிஅதை முழு மனதுடன் ஆதரித்து, அவரை வெற்றி பெற வைத்தவர்களில் முதன்மையானவர் ஜெயலலிதா.அதேபோல், 2012ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், பழங்குடியினத்தைச் சேர்ந்த முன்னாள் லோக்சபா சபாநாயகர் சங்மாவை, ஜெயலலிதா, பா.ஜ., தெலுங்கு தேசம் கட்சியினர் ஆதரித்தனர். ஆனால், உதட்டளவில் பழங்குடியினர் நலன், சமூக நலன் குறித்து பேசும் காங்கிரஸ், தி.மு.க., போன்ற எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியால், அவரால் வெற்றி பெற முடியவில்லை.
பத்து ஆண்டுகளுக்கு பின், ஜெயலலிதா கனவு நிறைவேற உள்ளது.தினமும் மூச்சுக்கு முன்னுாறு முறை, திராவிட மாடல் எனப் பேசும் ஸ்டாலின், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை ஆதரிக்கவில்லை. திராவிட மாடல், சமூக நீதி எனக் கூறி, மக்களை ஏமாற்றி வருகிறார்.இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும், ஒரே நேரத்தில் அரங்கில் அமர வைத்து, நிகழ்ச்சியை நடத்த, பா.ஜ., தலைவர்கள் முயற்சித்தனர். ஆனால், பழனிசாமி தரப்பினர் மறுத்து விட்டனர்.
இந்தத் தகவலை பன்னீர்செல்வத்திடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்ற பின், அரங்கிற்கு வர சம்மதம் தெரிவித்தார். பழனிசாமி தரப்பினரின் பிடிவாதத்தால், அனைவரையும் ஒரே நேரத்தில் மேடையில் அமர வைக்கும் முயற்சி தோல்வியை தழுவியது.
பன்னீர்செல்வம் கூறியதாவது:ஜனாதிபதி தேர்தலுக்கான, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர் திரவுபதி முர்முவை சந்தித்து, அ.தி.மு.க., சார்பில் எங்களின் இதயபூர்வமான ஆதரவை தெரிவித்துள்ளோம். அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, இன்று வரை நான் தான் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
''பாரதி கண்ட கனவு நாட்டில் நனவாகி வருகிறது,'' என ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.புதுச்சேரி என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு கேட்டு, அவர் பேசியதாவது:புதுச்சேரி அழகிய மாநிலம். பல கலாசாரம், பல மொழி பேசும் அன்பான மக்கள் வசிக்கின்றனர். அரவிந்தர், பாரதியார் உள்ளிட்ட மகான்கள் வசித்த புண்ணிய பூமி இது.'பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' என்று பாரதி பாடினார்.
அவரது கனவு நாட்டில் தற்போது நனவாகி வருகிறது. அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர்.சாதாரண பழங்குடியினத்தில் இருந்து, இன்றைக்கு நாட்டின் உயர் பதவியான ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். என்னை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
திரவுபதி முர்மு தன் பேச்சை துவக்கியபோது, ''தமிழக மக்கள் அனைவருக்கும், என் நெஞ்சார்ந்த வணக்கங்கள்,'' என, தமிழில் கூறினார். அதன்பின், ஆங்கிலத்தில் பேசினார். 'ஜெய்ஹிந்த், ஜெய்பாரத், ஜெய் தமிழ்நாடு' என கூறி பேச்சை முடித்தார். தமிழகம் மற்றும் தமிழ் மொழியின் சிறப்புகளையும், சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்தைசேர்ந்தவர்கள் ஆற்றிய பங்கையும் எடுத்துரைத்தார். இறுதியாக, ''உங்கள் சகோதரிக்கு, உங்களின் ஆசியையும், ஆதரவையும் தாருங்கள்,'' என, அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.