சென்னை:'எம்.எல்.ஏ.,க்கள், பிற மாநிலங்களில் அல்லது பார்லிமென்ட் வளாகத்தில் ஓட்டளிக்க விரும்பினால், வரும் 8ம் தேதிக்கு முன், தேர்தல் கமிஷனில் விண்ணப்பிக்க வேண்டும்' என, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிவிப்பு:
ஜனாதிபதி தேர்தல் வரும் 18ம் தேதி, தலைமைச் செயலகத்தில், சட்டசபை செயலக வளாகத்தில் உள்ள, கூட்ட அறையில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும். இங்கு எம்.எல். ஏ.,க்கள் ஓட்டளிக்கலாம். எம்.பி.,க்கள் மற்றும் பிற மாநில எம்.எல்.ஏ.,க்கள், தேர்தல் கமிஷன் அனுமதி பெற்றால், இங்கு ஓட்டளிக்கலாம். தமிழக எம்.எல்.ஏ.,க்கள் எவரேனும், பார்லிமென்ட் வளாகத்தில் அமைக்கப்படும் ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க விரும்பினால், படிவம் 'ஏ' வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
பிற மாநில சட்டசபை செயலக வளாகத்தில் அமைக்கப்படும் ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க விரும்பினால், படிவம் 'பி' வழியாக, நியாயமான காரணங்களுடன், வரும் 8ம் தேதிக்கு முன், தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.படிவங்களை, 'சுமன்குமார் தாஸ், செயலர், நிர்வச்சன் சதன், அசோகா சாலை, புதுடில்லி - 110001' என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்தல் கமிஷனுக்கு விருப்பத்தை தெரிவித்த பின், அதை மாற்ற ஆணையம் அனுமதிக்காது. எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க வரும்போது, அவர்களின் அடையாள அட்டையை, உதவி தேர்தல் அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.