விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ பாதை நீட்டிப்பு திட்ட விரிவான திட்ட அறிக்கை, தமிழக அரசின் ஒப்புதலுக்கு பின், மத்திய நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த சமூக சேவகர் தயானந்தகிருஷ்ணன், தமிழகத்தில் மெட்ரோ திட்ட பணிகள் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரியிருந்தார். இத்திட்டப்பணி குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே, 12 கி.மீ., புதிய மெட்ரோ பாதை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டது. இப்பாதை மற்றும் 12 நிலையங்கள் கட்டுவதற்கு, 4,528 கோடி செலவாகும் என, திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பாதையில், இடத்திற்கு தகுந்தபடி, தரைக்கு மேல், ௨௫ அடியில் இருந்து, ௪௦ அடி உயரம் வரை கட்டலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் ஒப்புதலுக்கு பின், மத்திய நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 பயணியருக்கு பரிசு
மெட்ரோ ரயிலில் பயணியருக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருள் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்தது. அதன் அடிப்படையில், மூன்றாவது மாதாந்திர குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயணியருக்கு,பரிசுகள் வழங்கப்பட்டன.
நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிதிப்பிரிவு இயக்குனர் பிரசன்ன குமார் ஆச்சார்யா பங்கேற்று, பரிசுகளை வழங்கினார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொதுமேலாளர் ஆர்.முரளி, கூடுதல் பொதுமேலாளர் எஸ்.சதீஷ்பிரபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
- நமது நிருபர் -