தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியில், வெள்ளம் தேங்கும் பகுதிகளில் உள்ள கால்வாய்களை முழுமையாக துார்வாரும் பணி வேகமாக நடந்து வருவதாக, மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். ஆண்டு தோறும் பருவ மழையின் போது தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்துார், செம்பாக்கம் பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும்.
இப்பகுதிகளில் வெள்ளம் தேங்குவதால், பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், வெள்ளம் தேங்குவதை தடுக்க வேண்டிய நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
அதன்படி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய் மற்றும் சிறு போக்கு கால்வாய்களை துார்வாரி,சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, 15 பேர் அடங்கிய, 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஐந்து மண்டலங்களில், ஒவ்வொரு மண்டலத்திற்கும் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. துார்வாரும் பணியின் போது வெளியேற்றப்படும் கழிவுகள், வாகனங்கள் மூலம் உடனுக்குடன் அகற்றப்பட்டு, கிடங்கிற்கு எடுத்து செல்லப்படுகின்றன.
அதே நேரத்தில், பெரிய கால்வாய்களும் துார்வாரப்பட்டு வருகின்றன.இப்பணிகள் வேகமாக நடந்து வருவதால், ஜூலை 31க்குள், 100 சதவீதம் முடித்து, வரும் பருவ மழையில் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வெள்ளம் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்தார்.