வீணான வாழை மரத்தில் இருந்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்கி, தொழில்முனைவோராக மாற விரும்பும் பெண்களுக்கு, தொழிற்பயிற்சி அளிப்பதுடன், இயந்திரங்களில் களப்பயிற்சி, தொழில்மையம் நிறுவ கடன், 100 சதவீத சந்தை வாய்ப்பு என, ஏராளமான வழிகாட்டுதல்களை, மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் வழங்குகிறது.
இதுதொடர்பாக, கோவை மத்திய வேளாண் பொறியியல் நிறுவன விஞ்ஞானிகள் ரவீந்தர நாயக் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது:வாழை மட்டையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை செய்யும் இயந்திரங்களை, வேளாண் விரிவாக்கத்துறை சார்பில் வடிவமைத்துள்ளோம். காய்ந்த மற்றும் பச்சை வாழை மட்டையில் இருந்து ஏராளமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க முடியும்.பச்சை வாழை மட்டையை நாராக பிரித்து, கயிறாக மாற்றும் இயந்திரத்தையும் வடிவமைத்திருக்கிறோம். இதிலிருந்து, கைப்பை, திரைச்சீலை, மிதியடி போன்ற பொருட்களை தயாரிக்க முடியும். தட்டு, குவளை போன்றவற்றை பாக்குமட்டையில் உருவாக்குவதைப் போன்றே, காய்ந்த வாழை மட்டையிலும் உருவாக்க முடியும்.வாழை சாகுபடியில், தார் அறுத்ததும், எஞ்சிய வாழை மரங்கள் வீணாகி விடும். அந்த வாழை மரங்களை விவசாயிகளிடம் இருந்து பெற்று, பல்வேறு பொருட்களை தயாரிக்கலாம். இதன் மூலம், ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் லாபம் ஈட்ட முடியும்.வாழைத்தண்டில் இருந்து, உணவு சார்ந்த பல்வேறு பண்டங்களை தயாரிக்கும் இயந்திரத்தையும் உருவாக்கியுள்ளோம். வாழைத்தண்டை தேவையான வடிவில் 'கட்' செய்து, விற்பனை செய்யலாம். புதிய தொழில்நுட்பம் காரணமாக, வெட்டப்பட்ட வாழைத்தண்டு கருக்காது; நீண்ட நாட்களுக்கு கெடாது.பல்வேறு சுவைகளில் ஜூஸ் வழங்கும் இயந்திரத்தையும் உருவாக்கியுள்ளோம்.
நான்கு வெவ்வேறு இயந்திரங்களை ஒருங்கிணைத்து, ஒரே இயந்திரமாக வடிவமைத்துள்ளோம். இந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை, சூப்பர் மார்க்கெட், உணவகங்களுக்கு வினியோகிக்கலாம் அல்லது ஜூஸ் கடை நடத்தலாம்.தொழில்முனைவோராக விரும்பும் பெண்களுக்கு மிக நல்ல வாய்ப்பு. குறிப்பாக, மகளிர் சுய உதவி குழுவினர் இந்த இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சி எடுத்துக் கொண்டால், நல்ல வருமானம் ஈட்டலாம்.
வேளாண் பொறியியல் துறை சார்பில் பயிற்சி அளித்து, உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான உத்தரவாதத்தையும் அளிக்கிறோம். இந்த இயந்திரங்களுடன் கூடிய தொழில்மையம் அமைக்க, வங்கி கடன் பெறுவதற்கான உதவிகளையும் செய்து தருகிறோம். கூடுதல் தகவல்களுக்கு, 0422 - 2472 621 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.