சென்னை, :சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்திற்கு எதிரில் உள்ள வாகன நிறுத்தத்தில், ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால், விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள், நிறுத்துவதற்கு இடமில்லாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.சென்னை விமான நிலையத்திலிருந்து, டில்லி, மும்பை, கோல்கட்டா, துபாய், கத்தார், கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு, தினசரி 150க்கும் மேற்பட்ட விமான சேவைகள் வழங்கப்படுகின்றன.இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, அதிகபட்சம் 12க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படுகின்றன. இதே போல, 15க்கும் மேற்பட்ட விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குகின்றன.இந்த நேரங்களில், விமான நிலையத்துக்கு வருவதற்கும், அங்கிருந்து செல்வதற்கும் ஆயிரக்கணக்கான பயணியர், நுாற்றுக்கணக்கான கார்களை பயன்படுத்துகின்றனர். விமான நிலையத்திற்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. மேலும், வாகனங்களை நிறுத்த இடமில்லாமலும் நெரிசல் ஏற்படுகிறது.இது குறித்து விமானப் பயணியர் கூறியதாவது:இரவு நேரங்களில் அதிக பயணியர் விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதற்காக, ஏராளமான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், சர்வதேச விமான முனையத்திற்கு எதிரே உள்ள வாகன நிறுத்தத்தில், ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இதனால், நிறுத்தத்திற்கான நுழைவு வாயில் எது; காரை எங்கு நிறுத்துவது போன்ற எந்தஒரு அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை.இது தவிர, பள்ளங்களுக்கு முன் எச்சரிக்கை பலகை, தடுப்புகள் ஏதும் வைக்கப்படவில்லை. இதனால், அசம்பாவிதங்கள் நிகழவும் வாய்ப்பு இருக்கிறது. நிறுத்தம் இல்லாததால், விமான நிலையத்திற்கு வரும் கார்கள், கிடைக்கும் இடங்களில் ஆங்காங்கே நிறுத்திச் செல்கின்றனர். இதனால், இரவு நேரங்களில், அதிக வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதை முறைப்படுத்தவும், வாகன நெரிசல்களை குறைக்கவும் விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் அடுக்குமாடி வாகன நிறுத்தத்திற்கான சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லை. எச்சரிக்கை பலகைகள் வைக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்துகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.