ஆவடி,:நில மோசடி புகாரில் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறி, ஆவடி கமிஷனர் அலுவலகத்தில், இரு மகள்களுடன், தீக்குளிக்க முயற்சித்த பெண்ணை அங்கிருந்தோர், காப்பாற்றி அனுப்பி வைத்தனர். ஆவடி அடுத்த பட்டாபிராம், ஆசிரியர் காலனியை சேர்ந்தவர், பவுசியா, 32. அவரது கணவர் சுரேஷ், 36. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு, பட்டாபிராம் கக்கன்ஜி நகர் பகுதியில், 4 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த நான்கு பேர், போலி பத்திரம் தயாரித்து அபகரித்ததாக பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகாரை ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.பணியில் இருந்த வட்டாட்சியர் ரஜினி என்பவர், புகாரை விசாரிக்காமல் அலைக்கழித்ததால், முதல்வரின் தனி பிரிவுக்கும் புகார் அனுப்பி உள்ளனர்.இந்நிலையில், நில அபகரிப்பில் ஈடுபட்ட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆவடி காவல் ஆணையரகத்தில் நேற்று முன்தினம், பவுசியா புகார் அளித்தார். அப்போது திடீரென தன் இரு மகள்களுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அங்கிருந்தோர் அவரை காப்பாற்றி, அனுப்பி வைத்தனர்.