வில்லிவாக்கம் :சிட்கோ தொழிற்பேட்டையில், தனியார் 'கெமிக்கல்' நிறுவனத்தில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில், வடமாநில தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்தார்.வில்லிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில், தனியாருக்குச் சொந்தமான, பிரியா என்டர்பிரைசஸ் என்ற 'கெமிக்கல்' தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 'டைல்ஸ்' உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் 'கெமிக்கல்' தயாரிக்கப்படுகிறது.இந்நிறுவனத்தில், அதே பகுதி 54வது தெருவில் வசிக்கும் கீர்த்திவாசன், 21, என்பவர் பணியாற்றுகிறார். நேற்று காலை 8:40 மணிக்கு, 'கெமிக்கல்' கலவையில் கீர்த்திவாசன் ஈடுபட்ட போது, எதிர்பாராதவிதமாக அங்கு தீப்பற்றியது. கீர்த்திவாசன் உடல் முழுதும் தீக்காயத்துடன் வெளியே ஓடி வந்தார். பின், தீ மளமளவென தொழிற்சாலை முழுதும் பரவியதால், அங்கு இருந்த 'கெமிக்கல் பேரல்'களும் வெடித்தாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்தது.தகவலறிந்து வில்லிவாக்கம், அண்ணா நகர், அம்பத்துார் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, இரண்டு மணிநேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். காயமடைந்த கீர்த்திவாசன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த தீ விபத்தில், நிறுவனத்தில் இருந்த இயந்திரங்கள் உட்பட அனைத்து பொருட்களும் நாசமாகின. இது குறித்து வில்லிவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.