ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்கனவே தமிழக அரசு தடை விதித்திருந்தது. நேற்றுமுன்தினம் முதல், மத்திய அரசின் தடையும் அமலுக்கு வந்துள்ளது.
திருப்பூரில், கொரோனா அலை துவங்கியபோது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், தடையை மீறி, அதிகளவில் பயன்பாட்டுக்கு வந்தன. கண்டிப்பான நடவடிக்கைகள் இல்லாததால், தற்போது, கடைக்கு கடை, பாலிதீன் கவர்கள் மூலம் பொதுமக்கள் தாராளமாக பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
மத்திய அரசின் தடையும் அமலுக்கு வந்துள்ளதால், இதை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்தே இதைத் தடுத்தால்தான், இந்தப்பொருட்களைப் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்க முடியும்.''தடையை சுமூகமாக அமல்படுத்த, இதுகுறித்த பிரசாரங்களை மாநில அரசுகள் தொடங்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கும் மற்றும் வினியோகிக்கும் நிறுவனங்களை மூடவும், இதுபோன்ற பொருட்களின் விற்பனையை தடுக்கவும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தடுக்க நுகர்பொருள் விற்பனைத்துறையினரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக மத்திய அரசு கூறுகிறது. இந்த பொருட்களை தயார் செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாற்றுப்பொருள் தயாரிப்புக்கு மாறியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தடுக்க முடியவில்லை
சமீப காலமாக திருப்பூருக்கு பாலிதீன் கவர் உள்ளிட்டவற்றை மொத்தமாக வினியோகிக்க கொண்டுவரப்படும் வாகனங்களை மடக்கி, பொருட்களை, மாநகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்து வருகிறது. ஆனால், ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாததால், இவற்றைத் தடுக்க முடியாத நிலையே இன்றளவும் நீடிக்கிறது.திருப்பூரில், கடைகள், தொழிற்சாலைகள், வீடுகள் என நீக்கமற ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் நிறைந்திருக்கின்றன.இவை மண்ணுக்கு ஏற்படுத்திய சீரழிவுகள் ஏராளம். சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றன. மழைநீர் மண்ணுக்குள் இறங்காமல் பிளாஸ்டிக் கழிவுகள் தடுக்கின்றன.
இதுகுறித்து கேட்டால், துாய்மைப்பணியாளர்களுடன் சண்டைபோடும் எண்ணத்தில்தான் பலர் உள்ளனர்'' என்கின்றனர் துாய்மைப்பணியாளர்கள்.இதேபோல் கடைகளுக்கு வருபவர்களும், 'இவ்ளோ பொருள் வாங்குறோம்... பாலிதீன் கவர் கொடுக்கமாட்டீங்களா' என கேட்கின்றனர். அவர்களிடம் பாலிதீன் கவர் வழங்காமல் மறுக்க முடிவில்லை என்கின்றனர் கடை உரிமையாளர்கள்.மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை. ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் கவரைக் கொடுத்தால் தட்டிக் கேட்பதோடு, அதை வேண்டாம் என்று மறுக்கும் எண்ணம், பொதுமக்களுக்கு வர வேண்டும்.