'குட்ரூ... குட்ரூ' குக்குறுவான் குருவிகள்
''குக்குரு... குக்குரு... குக்குரு... குக்குரு... குக்குரு... குர்ர...' என்ற சினிமா பாடல்களில் வருவது போன்ற, சிறிய சிட்டுக்குருவி போன்றவைதான், குக்குறுவான். இது என்ன கிளியா? பச்சைக்குருவியா? என்றெல்லாம் பிரமிக்க வைக்கின்றன, சின்னஞ்சிறு பச்சை நிற குருவிகள்.
திருப்பூர் புறநகர் பகுதிகளில், பரவலாக காணப்படுகின்றன, இவ்வகை குக்குறுவான் குருவிகள். ஆசியாவை பூர்வீகமாக கொண்ட பறவைகள், இந்தியா மற்றும் இலங்கை போன்ற வெப்ப மண்டல நாடுகளில் காணப்படுகின்றன. வெளுத்த இளம் சிவப்பு நிறத்தில், பெரிய தலை, தடிமனான அலகுடன், குக்குறுவான் பறவைகள் காணப்படுகின்றன. 'குட்ரூ... குட்ரூ' என்று தொடர்ச்சியாக குரல் எழுப்பது இவற்றின் சிறப்பு.பசுமையான மரக்கிளைகளில் அமர்ந்திருந்தால், இவற்றை கண்ணால் கண்டுபிடிப்பது சிரமம்; அந்த அளவுக்கு, இலை, தழை போன்ற பச்சை நிறத்தில் காணப்படுகின்றன.தமிழ் நுால்களில் கழுத்தறுத்தான் குருவி என்றும் கூறியுள்ளனர். ஆனால் அதற்கான காரணம் சரியாக தெரியவில்லை. கழுத்தை சுற்றிலும் கீற்றல் போன்ற செந்நிறம் இருப்பதால், அவ்வாறான பெயர் வந்திருக்கலாம்.குக்குறுவான் பறவைகளில், காட்டுப்பச்சை குக்குறுவான், வெண் கன்ன குக்குறுவான், செம்மார்பு குக்குறுவான் என, மூன்று ரக பறவைகள் உள்ளன; மூன்று ரகமும், இந்தியாவில் இருக்கின்றன.குக்குறுவான் பறவைக்கு, உடலுக்கு ஏற்ற அளவில் தலை இருப்பதில்லை; தலை சற்று பெரியதாக காணப்படுகிறது.ஆண், பெண் குக்குறுவான் குருவிகளை எளிதில் இனம்காண முடியாது. குக்குறுவான் குருவிகள், மா, பலா, வாழை, பப்பாளி, அத்தி, கொய்யா போன்ற சதைப்பற்றுள்ள பழங்கரை விரும்பி உண்கின்றன.கண்ணுக்கு தெரியும்படி, மரக்கிளைகளில் கூடு கட்டுவதில்லை; மரப்பொந்துகளில் கூடு கட்டி, நான்கு முட்டைவரை இடுகின்றன. ஆண், பெண் என, இருபறவைகளும் அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன. சின்ன குக்குறுவான்கள், 'குட்ரூ... குட்ரூ... ' என்று, தொடர்ச்சியாக ஒலி எழுப்பியபடி பொழுதை கழிக்கின்றன.திருப்பூருக்கு வந்தது புது விருந்தாளியோ என, பச்சை நிற பறவையை, கேமராவில் சிறை பிடித்தோம். இவை, தொற்று தொட்டு திருப்பூரை வலமும், இடமுமாக சுற்றிவரும் பறவைகள்தான் என்றாலும், 'துறுதுறு' என சுற்றும் குக்குறுவானின் பூர்வத்தை அலசிபார்த்தோம்.