வியாசர்பாடி, :வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலில், தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.சென்னை வியாசர்பாடியில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், ராஜராஜ சோழன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.இக்கோவிலில் கடந்த 26ம் தேதி, பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 27ம் தேதி சூரிய பிரபை உற்சவமும், 28ம் தேதி அதிகார நந்தி சேவை உற்சவமும் நடந்தது. கடந்த 29ம் தேதி, பவழக்கால் விமான உற்சவமும் நடந்தது.அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பல்வேறு பூஜைகள் உற்சவருக்கு நடந்தன.பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, நேற்று காலை 10:30 மணியளவில் வெகு விமரிசையாக நடந்தது. தேர் திருவிழாவை காண, ௧,௦௦௦க்கணக்கானோர் குவிந்து, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.வியாசர்பாடி, மூர்த்திங்கர் தெரு, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, முத்து தெரு வழியாக சென்ற தேர், மீண்டும் கோவிலை வந்தடைந்தது.பக்தர்கள் வழிநெடுகிலும் ஆரத்தி எடுத்து தேங்காய் உடைத்து வழிபட்டனர். சென்னையின் பல்வேறு பகுதியில் இருந்தும், தேர் திருவிழாவை காண திரளான பக்தர்கள் குவிந்தனர். திருத்தேரோட்டத்தின் போது, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, வரும் 4ம் தேதி தொட்டி விமான உற்சவமும், பிச்சாண்டவர் உற்சவமும், கைலாச ராவண உற்சவமும் நடக்கும்.வரும் 5ம் தேதி, ஸ்ரீ நடராஜ தரிசனமும், திருக்கல்யாணம் பஞ்ச மூர்த்திகள் உற்சவமும் நடக்கிறது. வரும் 6ம் தேதி, புஷ்ப பல்லக்கு உற்சவமும்; வரும் 7ம் தேதி உற்சவ சாந்தி அபிஷேகமும் நடக்கிறது.