ஆவடி, :வடிவேலு பட பாணியில், பலரை திருமணம் செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, ராஜூ நகர் 11வது தெருவைச் சேர்ந்தவர் ஹரி, 47; ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்கிறார். திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.இவர், இரண்டாவது திருமணம் செய்ய வரன் தேடினார். கடந்த ஆண்டு, அக்., ௨௫ல், ஆந்திரா மாநிலம் சித்துார் மாவட்டம், புத்துார் பகுதியைச் சேர்ந்த சந்தியா, ௪௪, என்பவருடன் ஹரிக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின், ஹரியின் சொத்துக்களை அபகரிக்க சந்தியா முயற்சி செய்ததுடன், சம்பள பணம் முழுதையும் கேட்டு சண்டை போட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஹரி, திருமணத்தை பதிவு செய்ய, மனைவி சந்தியாவிடம் ஆதார் கார்டு, கல்வி சான்றிதழ் கேட்டுள்ளார்.இவற்றை தர மறுத்ததால், சந்தியா மீது ஹரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் குறித்து விசாரிக்க, சந்தியாவிற்கு மூன்று முறை, மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.ஆனால், அவர் சம்மனை மதிக்காததால், கடந்தாண்டு ஜூன் 28ம் தேதி, சித்துார் சென்று கைது செய்து, சென்னை அழைத்து வந்து விசாரித்துள்ளனர். சந்தியா ஏற்கனவே திருமணமானவர். 2010ல், தன் முதல் கணவர் ரவி, ௫௨, என்பவருடன் சண்டை போட்டுக் கொண்டு, சித்துாரில் உள்ள தன் தாய் வீட்டில் வசித்துள்ளார். அப்போது, அவரது தாய் உதவியுடன், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வசிக்கும் சுப்பிரமணி, ௫௦, என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கடந்தாண்டு ஜூன் வரை சுப்ரமணியுடன் வாழ்ந்து வந்த சந்தியா, அடுத்த திருமணத்திற்கு தயாராகி, கடந்தாண்டு அக்., மாதம் ஹரியை திருமணம் செய்துள்ளார். சந்தியாவிற்கு இரண்டு மகள் உள்ளனர். அவர்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். ரவி, சுப்பிரமணி மற்றும் ஹரியை போல், சந்தியா பலருக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றி இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்த புகாரின்படி, ஆவடி மகளிர் போலீசார், சந்தியாவை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.