குடகு,-தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் வழக்கம் போல், ஹாரங்கி அணை நேற்று நிரம்பியது. அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் போது, கர்நாடகாவில் ஆண்டுதோறும் முதலில் நிரம்புவது, குடகு மாவட்டம், சோம்வார்பேட்டைவில் உள்ள ஹாரங்கி அணை தான்.மழையின் காரணமாக இந்தாண்டும் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 8.50 டி.எம்.சி., இதில், நேற்று காலை நிலவரப்படி 7.66 டி.எம்.சி., தண்ணீர் நிரம்பியது. அணை நிரம்புவதற்கு 1.17 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே பாக்கியிருந்தது. அப்போது வினாடிக்கு, 4,321 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.மாலை நிலவரப்படி வினாடிக்கு 6,000க்கும் அதிகமான கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.அணை நிரம்பியதால், பாதுகாப்பு கருதி நான்கு மதகுகள் மூலம் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., அப்பச்சு ரஞ்சன், அணைக்கு பூஜை செய்து, சீர் வரிசை சமர்ப்பணம் செய்தார்.நீர்ப்பாசன துறை உதவி செயற் பொறியாளர் மகேந்திர குமார் கூறுகையில், ''வரத்து அதிகமாகும் போது அணையில் இருந்து அதிகபட்ச தண்ணீர் வெளியேற்றப்படும். எனவே ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும். ஆற்றில் மீன்பிடிக்கவும், கால்நடைகளை விடவும் தடை விதிக்கப்படுகிறது,'' என்றார்.