கோலாரும் 'ஜீரோ' ஆகப் போகுதாம்!
முதலைகளும், திமிங்கலங்களும் இருக்கிற சமுத்திரமா தான் கை கட்சி இருந்து வருதாம். இத்தகைய சமுத்திரத்தில் அதிகார 'துடுப்பு' இல்லாமல் நகர முடியாதுன்னு 'மாஜி' செங்கோட்டை 'கை' முனி உணர்ந்துட்டாராம். பலரின் சாபத்தில் நனைந்த இவரின் தன்மானத்துக்கு, இழுக்கு வந்து விட்டதால், புல்லுக்கட்டு துாக்கலாமான்னு யோசிக்க வெச்சிருக்கு. கோலாரும் கை காரர்களுக்கு கோளாறா மாறிடுச்சு. புல்லுக்கட்டுக்கு மூணு கியாரண்டி ஆகிடிச்சாம். எதிர்ப்பார்ப்பில் இருந்த ப.பேட்டை, கோலாரு, சீனி..புரம் கை நழுவப் போகுதாம். மு.பாகல், மாலுார் கை பக்கம் நிறைய விரிசல் காணப்படுவதால், 'ஹீரோ' வாக இருக்க வேண்டிய மாவட்டம், 'ஜீரோ' வாக போகுதுன்னு ஊரை புரிஞ்சிக்கிட்டவங்க பேசுறாங்க.கிராம ஓட்டுகள் மட்டும் போதுமா?கோல்டன் வயலில் கிராமத்தின் பக்கம் நிறைய 'ஓட்டு' விளைச்சல் கிடைக்கும் என ச.ம.உ., கற்பனையில் மிதக்குறார். இவரின் ஒருதலை பட்ச சிந்தனை, சிட்டியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. 2018 ல் கை பக்கம் வேகமாக செயல்பட்ட பல செயல் வீரர்கள், அதிருப்தி யில் ஓய்வெடுத்து வராங்க. வங்கி அதிபரின் ஆதிக்கத்துக்கு எதிராக கட்சிக்காரர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்குறாங்க. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை நான்கு ஆண்டுகள் பதவி அதிகாரத்தில் இருந்த போது உணராமல் போனதை, நெனச்சி பார்க்க காலம் கனிந்திருக்குதாம்.புல்லுக்கட்டு காரர்கள் இன்னும் யார் வேட்பாளர் என்பதை முடிவெடுக்க வில்லை. பண வளமை மிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஆபிசர் ஒருத்தரை களத்தில் இறக்க போறாங்களாம். ஒருவேளை 'மாஜி' முனி புல்லுக்கட்டு துாக்கிக் கொண்டால், அவரது மகளை கை கட்சியில் ஜெயிக்க வைக்க 'டம்மி' வேட்பாளரை போட்டியிட வைக்கலாம் போல தெரிகிறது. அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே.இழந்ததை மீட்க முயற்சி!யாருமே எதிர்ப்பார்க்காதபடி பூ கட்சியில் புதிய வேட்பாளரை நிறுத்துவதாக மாநில தலைமையில் பேச்சு இருக்குதாம். சங்க்பரிவாருடன் தொடர்புடைய வெளியூர்காரரை பூ சின்னத்தில் போட்டியிட வைக்கப்போறாங்களாம். இது ஆருடம் இல்லை. 'கை' கட்சியை வேருடன் சாய்க்க, மாநிலம் முழுவதில் 'பி.எம்.,' அலையை எழுப்பும் புதிய திட்டம் அமலுக்கு வர போகுதாம். அசம்பிளிக்கு 60 ஐ கடந்தவர்களுக்கு சீட் இல்லை; கட்சி பதவியிலும் வாய்ப்பு இல்லையாம். தேசபக்தி, நிர்வாக திறன் மிக்கவரை தேடி கண்டுப்பிடித்து, தயார் படுத்திட்டாங்களாம். உள்ளூரு உட்கட்சி கோஷ்டி சிக்கலை தடுக்கவே காவிக் கொடிக்காரர்களுக்கு புது ரத்தம் பாய்ச்ச கோல்டன் சிட்டியிலும் முடிவு செஞசிட்டாங்களாம். இழந்த தொகுதியை மீட்பதில் ஸ்பெஷல் அட்டன்ஷன் காட்டுறாங்களாம்.ஒரு டஜன் வேட்பாளர்!பூத் கமிட்டி ஏற்படுத்த எல்லா கட்சியும் ஆர்வம் காட்டுறாங்க. ரெண்டு மூன்று கட்சிகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட போறாங்கன்னு பார்த்தால், ஒரு டஜன் வேட்பாளர்கள் போட்டியிட போறாங்களாம்.நகரம் நாறினால் என்ன, மாறினால் என்ன. யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்றிருந்தவர்களும், நானும் இருக்கிறேன்னு அடையாளம் காட்டுறவங்களும் தேர்தலில் போட்டிப்போட வரப்போறாங்களாம். ஏற்கனவே ஆயத்தமா இருக்கிற பூ, கை, சின்னங்களோடு, புல்லுக்கட்டு, 2 இ.கு.க., 2 செங்கொடி, ரெண்டு இலை, துடைப்பம், யானை, சமாஜ்வாதி மட்டுமின்றி சில சுயேச்சைகள் எல்லாமே கோல்டன் தொகுதியில் போட்டியிட தலைகாட்டுறாங்க. இந்த பட்டியல் போதுமா; இன்னும் கொஞ்சம் வேணுமான்னு தொகுதிக்குள்ளே கிண்டலடிக்கிறாங்க.