பெங்களூரூ; கப்பன் பூங்காவில் உள்ள, அரசு அக்வேரியத்தை அதி நவீனமாக அபிவிருத்தி செய்ய, மீன் வளத்துறை முடிவு செய்துள்ளது. 15 கோடி ரூபாய் செலவிலான பணிகளை, முதல்வர் பசவராஜ் பொம்மை, நாளை துவக்கி வைக்கிறார்.இது குறித்து, மீன் வளத்துறை அமைச்சர் அங்காரா கூறியதாவது:பெங்களூரின் கப்பன் பூங்காவில் உள்ள அக்வேரியத்தை அபிவிருத்தி செய்து, தரம் உயர்த்த திட்டம் வகுத்துள்ளோம். சுற்றுலா பயணியரை ஈர்க்க, சுரங்க அக்வேரியமாக அபிவிருத்தி செய்யப்படும். பணிகள் முடிந்த பின், சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.தற்போதுள்ள அக்வேரியம், 38 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆண்டு தோறும், 1.20 லட்சம் சுற்றுலா பயணியர் வருகின்றனர். 12 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. அக்வேரியத்தின் வடிவத்தை மாற்றி, சுரங்க அக்வேரியம் அமைத்தால், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, வருவாய் பெருகும்.15 கோடி ரூபாய் செலவிலான பணிகளை, முதல்வர் பசவராஜ் பொம்மை, நாளை துவக்கி வைப்பார். அக்வேரியம் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு, 80 ரூபாய், சிறியவர்களுக்கு 25 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் பெரியவர்களுக்கு, 100 ரூபாய், சிறியவர்களுக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.