உளுந்தூர்பேட்டை - சேலம் புறவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி துவங்கியது| Dinamalar

உளுந்தூர்பேட்டை - சேலம் புறவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி துவங்கியது

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (5) | |
உளுந்துார்பேட்டை - சேலம் சாலையில், கோர விபத்துகள் நிகழ்ந்து பல உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்த அகலம் குறைந்த அனைத்து புறவழிச்சாலைகளும் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை - சேலம் வரையிலான, 136.357 கி.மீ., சாலை, 2008ம் ஆண்டு ஜூலை மாதம், 941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி

உளுந்துார்பேட்டை - சேலம் சாலையில், கோர விபத்துகள் நிகழ்ந்து பல உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்த அகலம் குறைந்த அனைத்து புறவழிச்சாலைகளும் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.latest tamil news


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை - சேலம் வரையிலான, 136.357 கி.மீ., சாலை, 2008ம் ஆண்டு ஜூலை மாதம், 941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி துவங்கியது. இப்பணியை ரிலையன்ஸ் 'இன்பிராஸ்டெக்சர்ஸ்' நிறுவனம் டெண்டர் எடுத்தது. இந்நிறுவனம், நிலம் ஆர்ஜிதம் செய்வதில் பல்வேறு வழக்குகளை சந்திக்க நேரிட்டது. மேலும், சப் காண்ட்ராக்ட் எடுத்த நிறுவனங்களின் மெத்தனத்தால் சாலை பணிகளில் காலதாமதம் ஏற்பட்டது.


latest tamil news


இதன் காரணமாக 4 ஆண்டுகளுக்குப்பின் பணிகள் முடிந்து, 2012ம் ஆண்டு முதல், படிப்படியாக போக்குவரத்து துவங்கியது. பணி முழுதுமாக முடிந்து 2013ல் நான்கு வழிச்சாலை பயன்பாட்டிற்கு வந்தது.இந்த வழித்தடத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர், சேலம் மாவட்டம் நத்தக்கரை மற்றும் மேட்டுபட்டி உள்ளிட்ட 3 இடங்களில் டோல்கேட் அமைக்கப்பட்டு சுங்கவரி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உளுந்துார்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்துார், வாழப்பாடி, உடையாப்பட்டி ஆகிய 8 இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

அந்த சமயத்தில் வாகன போக்குவரத்து குறைவாக இருப்பதாகக் கூறி புறவழிச் சாலைகள் அனைத்தும் இரு வழிச்சாலையாக அமைக்கப்பட்டது.இருப்பினும், குறிப்பிட்ட மேம்பாலங்களின் கட்டுமானப் பணிகள் மட்டும் வரும் காலங்களில் 4 வழிச்சாலை அமைப்பதற்கேற்ப அகலமாக கட்டி முடிக்கப்பட்டது.ஆறுகள் குறுக்கிடும் கள்ளக்குறிச்சி, ஆத்துார், வாழப்பாடி ஆகிய புறவழிச்சாலையில் இரு வழிப்பாதைக்கான பாலம் மட்டுமே உள்ளதால் நான்கு வழிச்சாலை அமைக்கும் போது மற்றொரு புதிய பாலம் அருகில் அமைக்க வேண்டும்.


உயிர் பலி அதிகம்

சென்னை, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய தொழில் பெரு நகரங்களை இணைக்கும் பிரதான சாலையாக உளுந்துார்பேட்டை - சேலம் சாலையில், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.நான்கு வழிச்சாலைகளில் 120 கி.மீ., வேகத்திலும், புறவழிச்சாலையில் 60 கி.மீ., வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலையில் அசுர வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், அதே வேகத்தில் அகலம் குறைந்த புறவழிச் சாலையில் நுழையும் போது திடீரென ஒரே சாலையில் எதிரே வரும் வாகனங்களால், குழப்பம் அடைந்து விபத்துகள் ஏற்படுகிறது.அதேபோல், வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச்செல்ல முற்படும் போதும் விபத்துகள் ஏற்படுகிறது. ஆம்னி பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படும் போது, ஒரே விபத்தில் பலர் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் 2019 ஜூலை 16ம் தேதி இரவு ஆம்னி பஸ் - பிக்கப் வேன் மோதிய விபத்தில், 11 பேர் மற்றும் தியாகதுருகம், ஆத்துார், வாழப்பாடியில் 3 பேர் என கொத்துக் கொத்தாகவும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது.அதேபோல், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி தியாகதுருகம் புறவழிச்சாலை அருகே கார் மீது அரசு பஸ் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இறந்தனர்.வலுத்தது கோரிக்கை

இதுபோன்ற விபத்துகளால் ஏற்பட்ட அதிர்வலைக்குப்பின், இரு வழி புறவழிச்சாலைகள் அனைத்தையும் நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் துவங்கியது.அதனைத் தொடர்ந்து, புறவழிச்சாலையில் வாகனங்கள் முந்திச் செல்லாத வகையில் தற்காலிகமாக சாலையின் நடுவே 'போலார்டு' பொருத்தப்பட்டது. இதன் பின்னர், ஓரளவு விபத்துகள் குறைந்தது. ஆனாலும், குறைந்த வேகத்தில் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் கன்டெய்னர்களை 'ஓவர்டேக்' செய்து 'போலார்டு'கள் மத்தியில் புகுந்தும் அதனை இடித்துத் தள்ளிச் செல்லும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துகள் அரங்கேறியது. இதனால், பல இடங்களில் 'போலார்டு'கள் சேதமடைந்து காணாமல் போனது.


10 ஆண்டுக்கு பின்
உளுந்துார்பேட்டை - சேலம் இடையே உள்ள 8 புறவழிச் சாலைகளின் மொத்த துாரம், 37.892 கி.மீ.,துாரம் ஆகும். இவற்றின் அகலம் குறைக்கப்பட்டதே, இவ்வழித்தடத்தில் விபத்துகள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது. புறவழிச்சாலையை உடனடியாக அகலப்படுத்தினால் மட்டுமே பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கும் என 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதனையடுத்து, இரு வழிச்சாலையாக உள்ள புறவழிச் சாலைகள் தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகளை 'நகாய்' அதிகாரிகள் 10 ஆண்டுகளுக்கு பின் துவக்கியுள்ளனர்.

பணி துவங்கியது
இதற்காக முதல் கட்டமாக கள்ளக்குறிச்சி - உளுந்துார்பேட்டை இடையே உள்ள உளுந்துார்பேட்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 கி.மீ., தொலைவிலான 4 புறவழிச் சாலைகள் 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி துவங்கியுள்ளது.


சிக்கல் இல்லை

இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள சின்னசேலம், சேலம் மாவட்டம் ஆத்துார், வாழப்பாடி, உடையாப்பட்டி உள்ளிட்ட 27 கி.மீ., தொலைவிலான 4 புறவழிச்சாலைகளும் அகலப்படுத்தும் பணிகள் அடுத்தடுத்து துவங்கப்பட உள்ளது. புறவழிச்சாலை அனைத்திலும் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு ஏதுவாக, முன்கூட்டியே நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு 'நகாய்' கட்டுப்பாட்டில் உள்ளதால், தற்போது எந்த சிக்கலும் இன்றி பணிகளை தடையின்றி மேற்கொள்ள முடியும்.அதேபோல், புறவழிச்சாலையில், குறுக்கிடும் சாலை மீது அமைக்கப்பட்டுள்ள மேம்பாலங்கள் அனைத்தும் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு வசதியாக பெரும்பாலான பாலத்தை அகலப்படுத்தி ஏற்கனவே கட்டிமுடித்துள்ளதால், நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகளை விரைந்து முடித்திட வாய்ப்பு உள்ளது.


சர்வீஸ் சாலைகள்
புறவழிச்சாலை அனைத்தும் நான்கு வழிச்சாலையாக மாற்றாமல் விட்டதன் காரணமாக பல இடங்களில் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணியும் முழுமை அடையாமல் அரைகுறையாக உள்ளது.நான்கு வழிச்சாலை அமைக்கும்போது டெண்டர் எடுத்தவர்களின் மெத்தனத்தால் பணிகளை முடிக்க நான்கு ஆண்டுகள் வரை ஆனது. தற்போது அதே நிலை ஏற்படாமல் பணிகளை துரிதமாக செயல்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்ய 'நகாய்' அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ.250 கோடியில் பணிகள்தொடர்ந்து வலியுறுத்திய 'தினமலர்'

உளுந்துார்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரு வழிச்சாலையாக உள்ள புறவழிச் சாலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க தற்காலிகமாக சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என 'தினமலர்' நாளிதழ் சுட்டிக் காட்டியது. உடனடி நடவடிக்கையாக 'போலார்டு'கள் அமைத்து விபத்தைக் குறைத்தனர். மேலும், புறவழிச் சாலையில் ஏற்படும் விபத்துகளுக்கான காரணங்கள் மற்றும் அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நிரந்தர தீர்வாக புறவழிச் சாலையினை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இதன் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், 'நகாய்' அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தினர் மேலும், கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதமசிகாமணி, நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தியது மட்டுமின்றி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரியை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X