மும்பை :தமிழகத்தில் அதிகாரம் கைமாறியதால், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல்,
மஹாராஷ்டிராவிலும் ஆட்சியும், அதிகாரமும் கைமாறியதால், கட்டுக்கோப்பான கட்சி என பெயர் பெற்ற சிவசேனாவும், உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிர சட்டசபைக்கு, ௨௦௧௯ல் நடந்த தேர்தலில், பா.ஜ., - சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தது. ஆனால், முதல்வர் பதவிக்கு ஏற்பட்ட சண்டையால், கூட்டணி உடைந்தது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்த சிவசேனா, 'மஹா விகாஸ் அகாடி' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைத்தது. முதல்வராக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.
போர்க்கொடி
உத்தவ் அரசு, இரண்டரை ஆண்டுகளை பூர்த்தி செய்த நிலையில், சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், மாநில பொதுப் பணித்துறை அமைச்ச
ராகவும் இருந்த ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார்.தன் ஆதரவு எம்.எல். ஏ.,க்கள் 40 பேருடன் குஜராத், அசாம், கோவா மாநிலங்களில் தங்கினார்.
இந்நிலையில், உத்தவ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என, மாநில கவர்னர் கோஷ்யாரியிடம் பா.ஜ., புகார் கொடுத்ததையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவுக்கு கவர்னர் உத்தரவிட்டார்.இதற்கு தடை விதிக்க, சிவசேனா விடுத்த கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது
இதையடுத்து, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தாமலேயே, உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, பா.ஜ., ஆதரவுடன், ஷிண்டே மஹாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார்.சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே இருந்தவரை, அக்கட்சி மிகவும் கட்டுக்கோப்பாக இருந்தது. தலைமை பொறுப்பை உத்தவ் தாக்கரே ஏற்றபின், கட்சியில் சலசலப்புகள் ஏற்பட்டன.இந்நிலையில், பா.ஜ.,வுடன் கூட்டணியை முறித்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் உத்தவ் தாக்கரே கைகோர்த்ததை, சிவசேனாவினர் பலரும் விரும்பவில்லை.
பதவி மற்றும் அதிகாரத்துக்காக, தீவிர ஹிந்துத்வா கொள்கையிலிருந்து உத்தவ் தாக்கரே விலகிச் செல்வதாக, சிவசேனா தொண்டர்கள் கருதினர். இதன் எதிரொலியாகவே, தலைமைக்கு எதிராக ஷிண்டே உயர்த்திய போர்க்கொடிக்கு, தொண்டர்கள் ஆதரவு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
பன்னீர்செல்வம் கதி
தமிழகத்தில், 2016ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்த பின், முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றார்.இதன்பின், ஜெயலலிதா தோழி சசிகலாவை முதல்வராக்கும் முயற்சி நடந்ததால், பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதால், பழனிசாமி முதல்வரானார்.
அ.தி.மு.க.,வில் தனிப்பிரிவாக செயல்பட்டு வந்த பன்னீர்செல்வம், பின் பழனிசாமியுடன் கை கோர்த்து துணை முதல்வரானார். கட்சியில் பன்னீர் செல்வத்துக்கு இருந்த மதிப்பும், அதிகாரமும், பழனிசாமியிடம் மாறியது.கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க, தோல்வியடைந்து, எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், பன்னீர்செல்வம் முழுமையாக ஓரங்கட்டப்பட்டு விட்டார். அதனால், அ.தி.மு.க., எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதே நிலை, மஹாராஷ்டிராவில் சிவசேனாவுக்கும் எற்பட்டுள்ளது.
சட்டசபையில் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபிப்பார் என்பது உறுதியாக தெரிகிறது. அதன்பின், சிவசேனாவின் பெரும்பாலான தொண்டர்கள், ஷிண்டே பக்கம் சாய வாய்ப்புள்ளது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அப்போது, ஷிண்டே தலைமையில் இருப்பது தான், உண்மையான சிவசேனாவாக மாறிவிடும்.அதிகாரம் கைமாறிய நிலையில், அ.தி.மு.க.,வில் பன்னீர் செல்வத்துக்கு ஏற்பட்டுள்ள கதி, உத்தவ் தாக்கரேவுக்கு ஏற்பட்டால், சிவசேனா உடைவதை யாராலும் தடுக்க முடியாது.
இன்று சபாநாயகர் தேர்தல்
மஹாராஷ்டிரா சட்டசபையில், முதல்வர் ஷிண்டே, தன் அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நாளை நிரூபிக்க உள்ளார். இதையடுத்து இன்று சட்டசபை கூடுகிறது. இன்று நடக்கும் சபாநாயகர் தேர்தலில், பா.ஜ., சார்பில் ராகுல் நர்வேகர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மஹா விகாஸ் அகாடி சார்பில், சிவசேனாஎம்.எல்.ஏ., ராஜன் சால்வி போட்டியிடுகிறார்.
சிவசேனாவிலிருந்து, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை, அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நீக்கியுள்ளார்.இது பற்றி உத்தவ் தாக்கரே கூறியதாவது:சிவசேனாவுக்கு துரோகம் செய்தவர்கள், ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனாவை சேர்ந்தவர் என கூறுகின்றனர். சிவசேனாவை சேர்ந்த முதல்வராக, ஷிண்டேவை ஒரு போதும் ஏற்க முடியாது. கட்சிக்கு துரோகம் செய்த எம்.எல்.ஏ.,கள், மக்கள் நம்பிக்கையுடன் அளித்து ஓட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் பெரும் அவமரியாதை செய்துஉள்ளனர்.கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஷிண்டே, சிவசேனாவிலிருந்து நீக்கப்பட்டுஉள்ளார். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.சிவசேனாவிலிருந்து ஷிண்டே நீக்கப்பட்டது பற்றி அவரது ஆதரவு எம்.எல்.ஏ., தீபக் கேசர்கர் கூறுகையில், ''சிவசேனாவிலிருந்து ஷிண்டே நீக்கப்பட்டதை, சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்,'' என்றார்.