திருப்பூர்:பல்லடம் ரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர்.திருப்பூர் - பல்லடம் ரோடு தேசிய நெடுஞ்சாலை திருப்பூர் தெற்கு சப்-டிவிசன் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ரோட்டில் வாகன நெரிசல், விபத்துகள், போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கும் வகையில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவிடப்பட்டது. இது குறித்து, கடந்த மாதம் அறிவிப்பு செய்யப்பட்டது.ரோட்டோரங்களில் உள்ள கடைகள் மற்றும் கட்டடங்களின் முன்புறம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் வரை அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று துவங்கியது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் தென்னம்பாளையம் வரை ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், இளம் பொறியாளர் மணிகண்டன் முன்னிலையில் ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.கடைகளின் முன்புறமிருந்த ஷெட்கள், போர்டுகள், பந்தல், சிறிய சுவர்கள், படிக்கட்டுகள் அகற்றப்பட்டன. மேலும் ஒரு தள்ளுவண்டியும் பறிமுதல் செய்து லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டது.