புதுச்சேரி : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் 15வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் மார்த்தாண்டத்தில் நடக்கிறது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க செயற்குழு கூட்டம் நேற்று புதுச்சேரி சுப்பையா நினைவு இல்லத்தில் நடந்தது. கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.பின்னர் சங்கத்தின் கவுரவத் தலைவர் தமிழ்செல்வன், தலைவர் ராமலிங்கம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது
:செயற்குழு கூட்டத்தில், சங்கத்தின் 15வது மாநில மாநாட்டை, கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மாநாட்டிற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பங்கேற்கிறார்.அரங்க மாநாட்டை வரும் ஆக.,13ம் தேதி, கேரளா சாகித்ய அகாடமி தலைவர் சச்சிதானந்தன் துவக்கி வைக்கிறார்.மாநாட்டில் தமிழ்மொழி வளர்ச்சி, பண்பாடு, கல்வி உரிமை, சமூகநீதி, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் ஆகியவற்றிற்கு எதிரான மத்திய அரசின் போக்கு, இந்துத்துவத்தை கலை இலக்கியம் மூலம் எதிர்கொள்வது பற்றி விவாதிக்கப்படுகிறது.மேலும், மாநாட்டில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், ஓவியம், தொல்லியல் மற்றும் புத்தக கண்காட்சி நடைபெறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.