இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: தங்கையை கடத்திய கணவர்; காரில் தொங்கி மீட்ட மனைவி| Dinamalar

இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: தங்கையை கடத்திய கணவர்; காரில் தொங்கி மீட்ட மனைவி

Updated : ஜூலை 03, 2022 | Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (1) | |
இந்திய நிகழ்வுகள் கடன் தொல்லையால் குடும்பத்தினரை கொன்று கேரளா ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை திருவனந்தபுரம்-கேரளாவில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கடனில் தவித்த நிலையில், ஊராட்சி அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததால், குடும்பத்தினரை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.கேரளாவின் திருவனந்தபுரம் அருகேயுள்ள கல்லம்பலத்தில் வசித்தவர் மணி
இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்
கடன் தொல்லையால் குடும்பத்தினரை கொன்று கேரளா ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை


திருவனந்தபுரம்-கேரளாவில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கடனில் தவித்த நிலையில், ஊராட்சி அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததால், குடும்பத்தினரை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.கேரளாவின் திருவனந்தபுரம் அருகேயுள்ள கல்லம்பலத்தில் வசித்தவர் மணி குட்டன்,46. அதே ஊரில் ஹோட்டல் நடத்திய இவருக்கு சந்தியா, 36, என்ற மனைவியும், 13 மற்றும் 19 வயதில் மகள், மகன் இருந்தனர்.மணியின் அத்தை தேவகி, 85, என்பவரும் இவர்களுடனேயே வசித்தார். நேற்று காலை இவர்களுடைய வீடு நீண்ட நேரமாக திறக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்த போது, மணி குட்டன் துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். முன்னதாக மற்ற நால்வருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்தார் என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. சமீபத்தில் இவருடைய ஹோட்டலில் ஆய்வு நடத்திய ஊராட்சி அதிகாரிகள், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துஉள்ளனர். இதையடுத்து ஹோட்டலை பூட்டிய மணி, கடும் மன உளைச்சலில் தவித்துள்ளார். ஏற்கனவே அவருக்கு சில லட்சங்கள் கடன் இருந்ததால், இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.


latest tamil news

முன்னாள் எம்.எல்.ஏ., 'செக்ஸ்' வழக்கில் கைதுதிருவனந்தபுரம்-கேரளாவில், பெண்ணை பாலியல் தொல்லை செய்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ., கைது செய்யப்பட்டார்.கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த பி.சி.ஜார்ஜ்,70, கேரள ஜனபக்ஷம் என்ற கட்சியின் தலைவராக இருந்து, ஏழு முறை எம்.எல்.ஏ., பதவி வகித்துள்ளார். இந்நிலையில், 'சோலார் பேனல்' முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண்ணை பாலியல் தொல்லை செய்த வழக்கில், அவரை கேரள போலீசார் நேற்று கைது செய்தனர். தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் மீது குற்றம் சுமத்திய ஸ்வப்னா சுரேசுடன் இணைந்து முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்த திட்டம் தீட்டியது குறித்து விசாரிக்க, போலீசார் நேற்று, ஜார்ஜை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அவர், பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்டு பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.


latest tamil news
மணிப்பூர் நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வுமணிப்பூர் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. ராணுவ வீரர்கள் 12 பேர் உட்பட 38 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனி மாவட்டத்தில், ராணுவ முகாம் அருகே ரயில்வே 'யார்டு' கட்டும் பணி நடக்கிறது. இங்கு, கடந்த 29ம் தேதி இரவு பெய்த கன மழையால் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. ராணுவ வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர். சம்பவம் நடந்த அன்று 13 உடல்கள் மீட்கப்பட்டன. இதற்கு அடுத்த நாட்களில் ஏழு உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், நேற்று காலை மேலும் ஐந்து உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பணியில் இருந்த 12 ராணுவ வீரர்கள், 26 தொழிலாளர்கள் என, மேலும் 38 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பலியான வீரர்களுக்கு உரிய ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு, உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


சாராயம் கடத்திய 2 பேர் கைதுகச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் காரில் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கல்வராயன்மலையில் உள்ள கிளாக்காடு பகுதியில் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சுமோ காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், 4 லாரி ட்யூப்பில் 120 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் பிரபு, 28; சடையன் மகன் காமராஜ், 26; என தெரியவந்தது. உடன் இருவரையும் கரியாலுார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், இருவரையும் கைது செய்து, சாராயம் மற்றும் சுமோ காரை பறிமுதல் செய்தனர்.


தமிழக நிகழ்வுகள்latest tamil news
தங்கையை கடத்திய கணவர்; காரில் தொங்கி மீட்ட மனைவிவிழுப்புரம்: விழுப்புரத்தில் தங்கையை கடத்திச் சென்ற கணவர் காரின் முன்பக்கத்தில் தொங்கியபடி 500 மீட்டர் துாரம் சென்ற காரை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து உடைத்ததால் பரபரப்பு நிலவியது.

சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2018ம் ஆண்டு முதல் பிரிந்து வசிக்கின்றனர்.

இந்நிலையில் அவர் தனது மனைவியின் தங்கையை காதலித்து வந்துள்ளார். இதற்கு மனைவியின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பெண்ணுக்கு திருமண ஏற்பாடு செய்து, நகை எடுப்பதற்காக, நேற்று மாலை 4:30 மணியளவில் குடும்பத்துடன் விழுப்புரம் வந்தனர். இதனை அறிந்த அந்த நபர் நகைக் கடைக்கு அருகே தனது 'வோக்ஸ் வேகன்' காரில் காத்திருந்தார். கடையில் இருந்து வெளியே வந்த மனைவியின் தங்கையை காரில் ஏற்றிக் கொண்டு வேகமாக புறப்பட்டார்.

இதைப் பார்த்த மனைவி, காரின் முன்பக்கமாக ஓடிவந்து தடுத்தார். கார் முன்னேறிச் சென்றதால், காரின் முன்பக்க 'வைப்பரை' பிடித்தபடி தொங்கினார். அப்படியிருந்தும் காரை நிறுத்தாமல் நான்கு முனை சந்திப்பில் இருந்து சென்னை மார்க்கமாக காரை ஓட்டினார். ஆனால், அவரது மனைவி காரை விடாமல் தொங்கியபடி 500 மீட்டர் துாரம் வரை சென்றார். இதனைப் பார்த்த பொதுமக்கள், காரை துரத்திச் சென்று, பிள்ளையார்கோவில் பஸ் நிறுத்தம் அருகே மடக்கிப் பிடித்து சூழ்ந்து கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் மேற்கு போலீசார் காரில் இருந்த இருவரையும், காரில் தொங்கியபடி சென்ற பெண்ணையும் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். குடும்ப பிரச்னை என்பதால், மூவருக்கும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை. சினிமா பட பாணியில் காரில் பெண் தொங்கிக்கொண்டு சென்ற சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


விறகு வெட்டிய தகராறு: 7 பேர் மீது வழக்கு பதிவுதியாகதுருகம் : தியாகதுருகம் அருகே விறகு வெட்டிய தகராறில் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.தியாகதுருகம் அடுத்த வி.புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டையன் மகன் சரவணன், 50; சிங்காரவேலு மனைவி சரசு, 40; இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.கடந்த 29ம் தேதி அவர்களுக்குள் விறகு வெட்டியது தொடர்பாக தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், சரசு, அஜித்குமார், ஆகாஷ், செங்கான், சரவணன், அருள், அமுதா ஆகிய 7 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


விழுப்புரத்தில் ரூ 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்விழுப்புரம் : விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த முதியவரை, போலீசார் கைது செய்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் நகர பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.சாலமேடு, மணி நகர், நான்காவது குறுக்கு தெருவைச் சேர்ந்த ஹபீப் ரகுமான் ராவுத்தர், 65; வீட்டில், குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்து, 14 சிறிய பைகளில் வைக்கப்பட்டிருந்த 150 கிலோ குட்கா மற்றும் 94 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு 5 லட்சம் ரூபாய் ஆகும்.கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்களை எஸ்.பி. ஸ்ரீநாதா பார்வையிட்டு கூறுகையில்,

'தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இவற்றை தீவிரமாக கண்காணித்து தடுத்து வருகிறோம்.தற்போது பிடிபட்ட நபர், யாரிடம் இருந்து வாங்கினார் என விசாரணை நடத்தி வருகிறோம். கைது செய்யப்பட்டவரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.இதுவரை குட்கா வழக்கில் கைதாகிய 15 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்ய கூடாது. குட்கா விற்பனையை தடுக்கும் நடவடிக்கை தொடரும்' என்றார்.


காரைக்காலில் டிராக்டர் மோதி வாலிபர் பலிகாரைக்கால் : காரைக்காலில் பைக்கில் சென்ற வாலிபர் டிராக்டர் மோதி இறந்தார்.மயிலாடுதுறை அடுத்த தரங்கம்பாடி திருக்களாச் சேரியை சேர்ந்தவர் சிலம்பரசன், 30; இவர் ஓசூரில் கொத்தனார் வேலை செய்து வந்தார்.கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்த சிலம் பரசன் நேற்று முன்தினம் தனது பைக்கில் தாய் மல்லிகாவுடன் காரைக்கால் வரிச்சிக்குடியில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார்.

அப்போது, மண் ஏற்றி வந்த டிராக்டர், பைக் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த சிலம்பரசனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருந்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து டிராக்டர் டிரைவரான மயிலாடுதுறை காட்டுச்சேரியை சேர்ந்த கோபி, 45; என்பவரை தேடி வருகின்றனர்.


தண்ணீர் பாத்திரத்தில் விழுந்த குழந்தை பலிபவானி, -பவானி அருகே எலவமலை, அண்ணாநகரை சேர்ந்த கட்டட தொழிலாளி முருகன். இவரின் மனைவி ரேவதி. தம்பதியின் இரண்டாவது ஆண் குழந்தை ஸ்ரீநேஷ், ௨; மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. முருகன் நேற்று காலை வேலைக்கு சென்றதும், குழந்தைகளுடன் ரேவதி வீட்டில் இருந்தார்.
வீட்டில் விளையாடி கொண்டிருந்த ஸ்ரீநேஷ் தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து விட்டது. அதிர்ச்சி அடைந்த ரேவதி பவானி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றார். பரிசோதனை செய்த டாக்டர், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


வனப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆண் யானை


ஒகேனக்கல்,- ஒகேனக்கல் வனப்பகுதியில், ஆண் யானையை சுட்டுக்கொன்ற மர்ம நபர்களை பிடிக்க, வனத்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன. பொதுவாக கோடையில் கர்நாடக வனப்பகுதி
களில் இருந்து, உணவு மற்றும் தண்ணீர் தேடி ஏராளமான யானைகள் இங்கு இடம்பெயர்வது வழக்கம்.
தற்போது கோடை மழை பெய்வதால் யானைகள் அடர்ந்த வனப்பகுதியிலுள்ள நிலையில், ஒரு சில யானைகள் மட்டும் ஒகேனக்கல் சாலையை கடந்து சுற்றிதிரிந்தன.
இந்நிலையில், பென்னாகரம் வனப்பகுதி பேனுாரில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்திற்கு பின்புறம், நேற்று முன்தினம் காலை மர்ம நபர்களால், 42 வயது மதிக்கதக்க ஆண் யானை சுட்டு கொல்லப்பட்டு கிடந்தது. தகவலறிந்த பென்னாகரம் ரேஞ்சர் முருகன், சம்பவ இடம் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் அப்லா நாயுடு, தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னிலையில், கால்நடை மருத்துவர் பிரகாஷ் உடற்கூறு ஆய்வு செய்த பின், யானை அங்கேயே புதைக்கப்பட்டது.
இதுகுறித்து, பென்னாகரம் ரேஞ்சர் முருகனிடம் கேட்டபோது, ''யானை சுட்டுகொல்லப்பட்டது தொடர்பாக, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கிருஷ்ணகிரி உதவி வனப்பாதுகாவலர் முனியப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
உயரதிகாரிகள் தலைமையில் வனத்துறையினர், இரண்டு நாட்களாக இப்பகுதியில் முகாமிட்டு விசாணையில் ஈடுபட்டுள்ளனர். விசாரணை முடிவில்தான் யானை கொல்லப்பட்டதற்கான காரணம் தெரியவரும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X