விழுப்புரம்: ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் கேட்ட தகவல்களை தரமறுத்த 3 செயற் பொறியாளர்கள் விவசாயிக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வண்டிமேடு, விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 75; விவசாயி. ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். மின்துறை ஓய்வூதியதார்கள் சங்க செயலாளர்.இவர், சுயநிதி திட்ட விவசாய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம் மற்றும் வணிக இணைப்பில் இருந்து வீட்டு உபயோக இணைப்பாக மாற்றம் குறித்து 2019 அக்டோபர் 10ம் தேதி வரை பெற்ற விண்ணப்ப பதிவுகள் பற்றி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு அதே மாதம் 15ம் தேதி விண்ணப்பித்தார்.செஞ்சி மின் பகிர்மான வட்டத்தைத் தவிர மற்ற மின் பகிர்மான வட்டத்தில் உள்ள அதிகாரிகள் தகவல் தரவில்லை.
இதையெடுத்து ராஜேந்திரன், மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த மனு மாநில தகவல் ஆணையர் தமிழ்க்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.ராஜேந்திரன் கேட்ட தகவல்களை கால தாமதமாகவும், தகவல் தர மறுத்ததால், தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி, விழுப்புரம், திண்டிவனம், கண்டமங்கலம் மின்பகிர்மான வட்ட இயக்குதல், பராமரித்தல் பிரிவு செயற்பொறியாளர்கள், நஷ்ட ஈடாக தலா 5,000 ரூபாய் வழங்க வேண்டும். மேலும், ராஜேந்திரன் கேட்ட தகவல்களை இரு வார காலத்திற்குள் பதிவு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தமிழ்க்குமரன் உத்தரவிட்டார்.