கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், கோவை மாவட்டத்தில் முதல் அரையாண்டிலும், தென்மேற்குப் பருவமழை துவங்கிய பின்னும் மழையளவு பெருமளவில் குறைந்துள்ளது.
தமிழகத்துக்கு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை ஆகிய இரண்டு பருவமழைக் காலங்களில், மழை கிடைக்கிறது. வழக்கமான ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் தென்மேற்குப் பருவமழை, இந்த ஆண்டில் கேரளாவில் முன் கூட்டியே மே மாத இறுதியில் துவங்கி விடுமென்று வானிலை ஆராய்ச்சி மையம் கணித்தது. அதற்கேற்ப கேரளாவில் மழை துவங்கியது.
ஆனால் ஜூனில் மழையின் அளவு மிகவும் குறைந்து விட்டது.இந்த ஆண்டின் துவக்கத்தில், ஜனவரி மாதத்தில் வழக்கத்துக்கு மாறாக, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. உதாரணமாக, சென்னையில் ஜனவரி மாத சராசரி மழையை விட 225 சதவீதமும், தர்மபுரியில் 113 சதவீதமும், அரியலுாரில் 106 சதவீதமும் கூடுதலாக மழை பெய்திருந்தது.
புள்ளி விபரம்
செங்கல்பட்டு, கடலுார் மாவட்டங்களிலும் முறையே 30, 34 சதவீதம் அளவுக்கு கூடுதல் மழை பதிவாகி இருந்தது. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவையில் வழக்கத்தை விட 49 சதவீதம் மழை குறைந்திருந்தது.வழக்கமாக பிப்ரவரியில் 14 சதவீதமும், மார்ச் மாதத்தில் 34 சதவீதமும், ஏப்ரலில் 72 சதவீதமும் சராசரியாக மழை பெய்யும்.
ஆனால் இந்த ஆண்டில், கோவை மாவட்டத்தில் பிப்ரவரியில் ஒரு சதவீதம் கூட மழை பதிவாகவில்லை. மார்ச் மாதத்தில், 27 சதவீதமும், ஏப்ரலில் 66 சதவீதமும் குறைவாக மழை பெய்துள்ளது. தென்மேற்குப் பருவமழை துவங்கும் ஜூன் மாதத்தில், 82 சதவீதம் அளவுக்கு மழை குறைந்துள்ளதாக மழையளவு பதிவான புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.கடந்த ஆண்டில், தென்மேற்குப் பருவமழைக் காலமான ஜூன்-செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்களில் 1044 மி.மீ., அளவுக்கு மழை பெய்திருந்தது.
எதிர்பார்ப்பு
ஆனால் அதற்கு முந்தைய ஆண்டில் அதே காலகட்டத்தில், 1235 மி.மீ.,மழை பதிவாகியிருந்தது. ஆனால் வடகிழக்குப் பருவமழை, அதை சரி செய்தது. அக்டோபர்-டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் பெய்யும் வடகிழக்குப் பருவமழை, கடந்த 2021ல் 308 மி.மீ., மட்டுமே பெய்திருந்தது; ஆனால் கடந்த ஆண்டில் 693 மி.மீ., மழை பதிவானது.ஒட்டு மொத்தமாக, கோவை மாவட்டத்தில் கடந்த 2020ல் 1716 மி.மீ., அளவிலும், 2021ல் 2234 மி.மீ., என்ற அளவிலும் மழை பெய்திருந்தது.
ஆனால் இந்த ஆண்டின்முதல் அரையாண்டிலேயே, பெருமளவில் மழையளவு குறைந்து கொண்டிருப்பது, இதுவரையிலான மழைப்பதிவு புள்ளி விபரங்களில் தெரிகிறது. இனி வரும் நாட்களில், தென்மேற்குப் பருவமழை அதிகமாகப் பெய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று, வடகிழக்குப் பருவமழையும் கடந்த ஆண்டைப் போல கைகொடுப்பதற்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-