வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திண்டுக்கல்: ஆண்களுக்கு ஆங்கிலம் தெரிய வேண்டும், பெண்கள் அழகாக இருந்தால் மட்டுமே வேலை மற்றும் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என வேடசந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., காந்திராஜன் பேசியது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் பள்ளிகல்வித்துறை சார்பில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான கல்லூரி கனவு என்ற உயர்கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில், கலந்து கொண்ட வேடசந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., காந்திராஜன் பேசியதாவது: இன்றைக்கு உள்ள பன்னாட்டு நிறுவனங்கள், கல்லூரிகளில் நீங்கள் எடுத்த மதிப்பெண்ணை பார்ப்பதில்லை. மதிப்பெண் முக்கியம் என்றாலும், அவர்கள் உங்களுக்கு உள்ள ஆங்கில அறிவுத்திறனை பார்க்கிறார்கள். நீங்கள் தெளிவாகவும், விரைவாகவும் ஆங்கிலத்தில் பேச வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் என்பதை தான் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
ஆங்கில திறன் இல்லாமல், நீங்கள் தலைகீழாக நின்றாலும் எந்த பயனும் இல்லை. அதிக சம்பளம் வேண்டும் என்றால், நீங்கள் நன்றாக ஆங்கிலம் பேச வேண்டும். பெண்களாக இருந்தால், அழகாக இருக்க வேண்டும் என நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
அவரது பேச்சு, அங்கிருந்த அதிகாரிகள், மாணவ, மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.