வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாமக்கல்: ஒழுங்கீனம் மற்றும் முறைகேடு அதிகரித்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாமக்கல் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் ஸ்டாலின் பேசியதாவது: உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களாட்சியின் உயிர்நாடி. பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது சாதாரணமானது அல்ல. அண்ணாதுரை, காமராஜர், ராஜாஜி ஆகியோர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்கள். நானும் சென்னை மேயராக இருந்துள்ளேன். மக்கள் பணியில் முதல் பணி உள்ளாட்சி அமைப்புகள் தான்.

அதன் மூலம் தான் மக்களுக்கு நேரடியாக தொண்டாற்றும் பயிற்சியை பெறும். மக்கள் தொண்டுக்கு பயிற்சி பெறும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தின் அனைத்து ஊர்களும் மாற வேண்டும். அனைத்து மாவட்டங்களும், ஊர்களும் வளர வேண்டும். அது உங்களின் கைகளில் உள்ளது.
நீங்கள் தவறு செய்துவிட்டால் மக்கள் உங்களை புறக்கணிப்பார்கள். எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணியாற்ற வேண்டும்.புதிதாக வந்த பெண்களுக்கு பயமோ கூச்சமோ இருக்கக்கூடாது.பெண்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். பொறுப்புகளை கணவர்களிடம் தரக்கூடாது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்சிக்கும் ஆட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நிலையை யாரும் ஏற்படுத்தி விடக்கூடாது. தவறு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். யாரோ செய்யும் தவறினால், முதல்வராகிய நானும், கோடிக்கணக்கான தொண்டர்களும் வெட்கிதலை குனியும் நிலையை ஏற்படுத்திவிடக்கூடாது. ஒழுங்கீனங்கள் அதிகரித்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.