வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.,வின் சகாப்தம் தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
ஐதராபாத்தில் நடக்கும் பா.ஜ.,வின் செயற்குழு கூட்டத்தில் அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்து அக்கட்சி மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பேசினார்.

அமித்ஷா பேசியது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில், நாட்டில், அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பா.ஜ.,வின் சகாப்தமாக இருக்கும். இந்தியா உலக நாடுகளின் தலைவராக உருவெடுக்கும். குடும்ப அரசியல், ஜாதி மற்றும் திருப்திப்படுத்தும் அரசியல் ஆகியன மிகப்பெரிய தீங்காக உள்ளன. இந்தியா பல ஆண்டுகளாக துன்பங்களை அனுபவிப்பதற்கு இதுவே காரணம். வளர்ச்சி அரசியல் கொண்ட பா.ஜ.,வை மக்கள் ஏற்று கொண்டுள்ளனர். பா.ஜ.,வின் சமீபத்திய தொடர் வெற்றிகள் இதையே காட்டுகிறது. தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் குடும்ப ஆட்சியை பா.ஜ., முடிவுக்கு கொண்டு வரும். தமிழகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் அதிகாரத்தை பா.ஜ., கைப்பற்றும்.
குஜராத் கலவரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. கடவுள் சிவன் போல பிரதமரும் விஷத்தை முழுங்கினார். ஆனால், உண்மை வெளியே வந்ததும், தங்கம் போல் ஜொலிக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் எந்த பிரச்னையும் இருக்காது. 2024க்குள் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். இவ்வாறு அமித்ஷா பேசியதாக ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.