சென்னை:சென்னை மாநகராட்சி சார்பில் 1.29 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்றுகள் பாசி படர்ந்து, கொசு புழு உற்பத்தியாகி வருகிறது.
சென்னை மாநகராட்சியை அழகுபடுத்தும் பணியில், மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோயம்பேடு, ஸ்பென்சர் பிளாசா சிக்னல் அண்ணாசாலை, எழும்பூர் உள்ளிட்ட 26 இடங்களில், 1.29 கோடி ரூபாய் செலவில் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன.விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட செயற்கை நீரூற்றுகள், பார்ப்போரை ரசிக்க வைக்கும் நிலையில் அமைக்கப்பட்டிருந்தது.
ஓரிரு நாட்களே பயன்பட்ட நிலையில், தற்போது செயற்கை நீரூற்றுகள், பாசி படர்ந்து காணப் படுகிறது. இதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். செயற்கை நீரூற்று இயக்கப்படாமல் இருக்கும்போது, அந்த நன்னீரில், 'ஏடிஸ் - எஜிப்டி' என்ற கொசு உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தொடர்ந்து ஓரிரு வாரங்களுக்கு பின், பாசி படர்ந்து கழிவுநீராக மாறும்போது, 'அனோபிலிஸ்' என்ற கொசு உற்பத்தியாகி, மலேரியா காய்ச்சலை ஏற்படுத்தும். எனவே, செயற்கை நீரூற்றுகளில் உள்ள பாசி படர்ந்த நீரை அகற்றி, அவற்றை மீண்டும் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.