உடுமலை:அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்களை, வரும் 6ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு வாயிலாக தற்காலிகமாக நிரப்ப, கல்வித்துறை நடவடிக்கை எடுத்திருந்தது. சில மாவட்டங்களில், இதில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கல்வித்துறை சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.அவ்வகையில், இதன்கீழ் இடைநிலை ஆசிரியர் பதவிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு 1 தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு 2 தேர்ச்சி பெற்றிருந்தால் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். முதுகலை ஆசிரியர் பதவிக்கு, 2020 ஜன., 30ன் படி வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகள் இருக்க வேண்டும்.திருப்பூரில் தொடக்க கல்வித்துறையின் கீழ், 54 இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், 67 பள்ளிகளில், 86 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.தமிழ், கணிதம், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல், மனையியல் பாடப்பிரிவுகளுக்கும் காலியிடம் உண்டு.மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கூறியதாவது: தமிழகத்தில், 22 மாவட்டங்களில் மட்டுமே தற்காலிக நியமனம் நடைமுறைக்கு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் எழுத்து வாயிலான விண்ணப்பங்களை நேரடியாகவோ இமெயில் மூலமாகவோ, உரிய கல்வி தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் இன்று முதல் முதல் 6ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.விபரங்களுக்கு - 0421 2971154, 2971158, எண்ணை அழைக்கலாம். மேலும் தாராபுரத்திற்கு - 04258 222554, உடுமலை - 0452 296350, பல்லடம் - 04255 292030 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.