உடுமலை:மாவட்ட அளவிலான இலக்கியப்போட்டியில் பங்கேற்க, பள்ளி மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும், ஜூலை 18ம் தேதி, தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுமென, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மாவட்ட அளவிலான மாணவ, மாணவியருக்கு, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது.தமிழ்நாடு நாளை முன்னிட்டு, திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில், 5ம் தேதி கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடக்கிறது.
போட்டியில், 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.பள்ளித்தலைமையாசிரியர் பரிந்துரை கடிதம் பெற்று வந்து, மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம். ஒரு பள்ளியில் இருந்து, ஒரு போட்டிக்கு, இரு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும், போராட்டங்களும், தமிழ்நாட்டுக்காக உயிர் கொடுத்த தியாகிகள், அண்ணாதுரை பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம் உட்பட பல தலைப்புகளில் போட்டிகள் நடக்கும்.போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெறும் பள்ளி மாணவருக்கு, மாவட்ட அளவில், முதல் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசாக, 7,000 ரூபாய்; மூன்றாம் பரிசாக, 5,000 என்ற வகையில் வழங்கப்படும். போட்டிகள் நடத்திய அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். போட்டிகளில் பங்கேற்று, திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.