செயல்படாத சிக்னல்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, வேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில், போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது நீண்ட நாட்களாக செயல்படுவதில்லை. இதை செயல்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.- செல்வம், உடுமலை.
வீடுகள் சேதம்
மருள்பட்டி ஹவுசிங் யூனிட் வீடுகள் சேதமடைந்து வருகிறது. அப்பகுதியில், விஷ ஜந்துகள் ஜாலியாக உலா வருகின்றன. அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இவ்வீடுகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கண்ணன், உடுமலை.
துார்வார வேண்டும்
உடுமலை ஆண்டாள் சீனிவாசன் லே அவுட் மழைநீர் வடிகால் துார்வாரப்படாமல் உள்ளது. இதனால், மழைநீர் செல்லாமல் தேங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் இதை துார்வார வேண்டும்.- ராமசாமி, உடுமலை.
அதிகாரிகள் கவனத்துக்கு
உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் பழைய பொருட்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதி பொலிவிழந்து காணப்படுகிறது. இந்த பொருட்களை நகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும்.- மோகனசுந்தரம், உடுமலை.
குப்பையை அகற்றணும்
உடுமலை நகராட்சி சந்தையில் குப்பை, காய்கறி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அவை நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதை நகராட்சி சுகாதாரத்துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சண்முகம், உடுமலை.
மூடியை சரிசெய்யணும்
உடுமலை கச்சேரி வீதியில், அரசு அலுவலகங்கள் அதிக அளவில் உள்ளதால், போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பாதாளச்சாக்கடை மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.- சோமசுந்தரம், உடுமலை.
அகற்றுவது எப்போது?
உடுமலை ராஜேந்திரா ரோடு கல்வி மாவட்ட அலுவலக வளாக சுவரில், மரக்கிளை விழுந்து அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு இடையூறாக உள்ளது. இந்த மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராமன், உடுமலை.
மக்கள் பாதிப்பு
உடுமலை அரசு மருத்துவமனை முன் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த அந்த வழியாக ஆம்புலன்ஸ் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு வாகனங்கள் நிறுத்துவதை போலீசார் தடுக்க வேண்டும்.- கந்தசாமி, உடுமலை.
பாதியில் நிற்கும் பணி
உடுமலை, பார்க் ரோடு, நகராட்சி அண்ணா பூங்கா உள்ளது. இங்கு புதுப்பிப்பு பணி நடந்துவருகிறது. தற்போது இப்பணிகள் மந்த கதியில் பாதியில் நிற்கிறது. இப்பணியை விரைந்து முடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சாந்தி, உடுமலை.
மழைநீர் வடிகால்
உடுமலை - பழநி ரோட்டில் நாராயணன் காலனி உள்ளது. இங்கு மழைநீர் வடிகால் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இப்பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- லாவண்யா, உடுமலை.