உடுமலை:தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், குளறுபடி, முறைகேடுகளை தவிர்க்க, நிதி மற்றும் தொழிலாளர்கள் ஒதுக்கீடு குறித்த விபரங்களை, ஊராட்சி அலுவலக தகவல் பலகையில், பணி துவங்கும் முன்பே, வாரம்தோறும் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில், 72 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ், நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள் துார்வாருதல், விளைநிலங்களில் வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும், திட்ட நிதியின் கீழ், சில கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு பணியும் தற்போது நடக்கிறது.மூன்று ஒன்றியங்களிலும், நாள்தோறும், 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக, பெறப்படும் விண்ணப்பங்கள் அடிப்படையில், மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டு, அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு பெற்று, தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்ட செயல்பாடுகளில், மத்திய, மாநில அரசுகளில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.இருப்பினும், திட்ட செயல்பாட்டில், வெளிப்படைத்தன்மை இல்லாததால், பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடக்கிறது; திட்டத்தின் நோக்கமும் கேள்விக்குறியாகி வருவதாக, ஆங்காங்கே புகார் தெரிவிக்கப்படுகிறது.உதாரணமாக, நீர் வழித்தடங்கள் துார்வாருதல், தனிநபர் விண்ணப்பம் அடிப்படையில், விளைநிலங்களில் பணிகள் மேற்கொள்வதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.
திட்ட விதிமுறை
திட்ட விதிகளின்படி, 'ஒவ்வொரு பணித்தளத்திலும் பணி தொடர்பான தகவல் பலகை வைக்க வேண்டும். ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக சுவர் விளம்பரம் ஊராட்சி அலுவலகம், கிராம சேவை கட்டடத்தில் எழுத வேண்டும். இதன் வாயிலாக நடைபெற்று வரும் பணிகளை பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்,' என தெரிவிக்கப்பட்டது.ஆனால், இந்த விதிமுறைகள் ஊராட்சிகளில், பின்பற்றப்படுவதில்லை. பணிகள் முடிந்த பிறகே, நிதி ஒதுக்கீடு, பயன்படுத்தப்பட்ட தொழிலாளர் எண்ணிக்கை, பணி துவக்கம், நிறைவு குறித்த தகவல் பலகை வைக்கப்படுகிறது.
இதனால், ஒருவரது நிலத்துக்கு பணியாணை பெற்றுக்கொண்டு, தொழிலாளர்களை, வேறு நிலங்களுக்கு பணிக்கு அனுப்புவது, பணிக்கு செல்லாதவர்களுக்கும் சேர்த்து சம்பளம் பெறுவது போன்ற முறைகேடுகள் அதிகம் நடக்கிறது.தகவல் பலகை வைக்காததால், மக்களுக்கு எந்த விபரங்களும் தெரியாமல், புகார் தெரிவிக்கவும் வழியில்லாமல், தவிக்கின்றனர். உதாரணமாக, நீர் வழித்தடங்கள் சீரமைப்பு பணி நிறைவு பெற்று நீண்ட காலம் கழித்தே தகவல் பலகை வைக்கப்படுகிறது. அதற்குள், பணி நடந்த இடம், மீண்டும் புதர் மண்டி, மண் மேடாகி, வெறும் தகவல் பலகை மட்டுமே காணப்படுகிறது. நீர்வழித்தடங்களை மீட்க, அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி வீணடிக்கப்பட்டாலும், அது குறித்து திட்டம் நடக்கும் போதே தெரியாததால், சமூக ஆர்வலர்களும் வேதனைக்குள்ளாகின்றனர்.பெரும்பாலான பணித்தள பொறுப்பாளர்கள், குறிப்பிட்ட நாட்களுக்குப்பிறகு, விதிகளின்படி மாற்றியமைக்காமல், நீண்ட காலமாக ஒரே இடத்தில், பணியாற்றுவதும், இந்த முறைகேடு தொடர காரணமாகியுள்ளது.பல லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறும், பல கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கப்படும், திட்டத்தில் ஆக்கப்பூர்வமான பணிகள் நடக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.இதற்காகவே, மத்திய, மாநில அரசு தரப்பில், மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் குறித்த விபரங்களை, இணையதளம் வாயிலாக பதிவேற்றி வருகின்றனர்.
ஆனால், ஒன்றியங்களிலும், ஊராட்சிகளிலும், இத்திட்ட செயல்பாடுகளில், விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை.இப்பிரச்னைக்கு தீர்வாக, வாரம்தோறும், கிராமங்களில், மேற்கொள்ளப்படும் பணிகள், நிதி மற்றும் தொழிலாளர்கள் ஒதுக்கீடு, பணித்தள மேற்பார்வையாளர், புகார் எண் குறித்த விபரங்களை, ஊராட்சி அலுவலக தகவல் பலகையில், முன்னதாகவே வெளியிட வேண்டும்.இதனால், பெரும்பாலான முறைகேடுகளை தவிர்க்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில், மத்திய, மாநில அரசுக்கு தொடர்ந்து மனு அனுப்பி வருகின்றனர்.