'இந்திய அரசியலில், அடுத்த 30 - 40 ஆண்டுகள் பா.ஜ.,வின் சகாப்தமாகவே இருக்கும். தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கத்தில் நடக்கும் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவதுடன், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி அமைக்கப்படும்,'' என, கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசினார்.
இது தொடர்பான அரசியல் தீர்மானம், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் நடந்த கட்சியின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது.
மாநிலத்தில் பா.ஜ., வளர்ச்சி அடைந்து வருகிறது. இதையடுத்து பா.ஜ., மீதும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் சந்திரசேகர ராவ் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.இந்நிலையில், பா.ஜ.,வின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம், தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் நடந்தது. நேற்று முன்தினம் ராணுவத்தில் இளைஞர்கள் சேரும், 'அக்னிபத்' திட்டம் மற்றும் மத்திய அரசில் காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை, 18 மாதங்களில் நிறைவேற்றும் மத்திய அரசின் திட்டங்களை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசியல் தொடர்பான தீர்மானம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 'தெற்கு நோக்கி' என்ற பெயரிலான இந்த தீர்மானத்தை முன்மொழிந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:இந்திய அரசியலில், அடுத்த, 30 - 40 ஆண்டுகள் பா.ஜ.,வின் சகாப்தமே இருக்கும். இதன் வாயிலாக உலக நாடுகளுக்கு இந்தியா தலைமையேற்கும்.அரசியல் ரீதியில் இதுவரை ஆட்சி அமைக்காத மாநிலங்களில் பா.ஜ., அரசுகள் அமைவதை நாம் உறுதி செய்ய வேண்டும். தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கத்தில் நடக்கும் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.
இதைத் தவிர தமிழகம், ஆந்திரா, கேரளா, ஒடிசா என, இதுவரை ஆட்சி அமைக்காத மாநிலங்களில் பா.ஜ., அரசுகள் அமைவதை உறுதி செய்வோம்.இதற்காக தெற்கு நோக்கி என்ற பெயரில், தென் மாநிலங்களில் பா.ஜ.,வை வலுப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ஜனநாயக ரீதியில் உள்கட்சித் தேர்தல்கூட நடத்தப்படவில்லை; அவ்வாறு நடந்தால், கட்சி தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து கைநழுவிவிடும் என்று அக்கட்சி தலைமை நினைக்கிறது.
எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை. பல மாநிலங்களில் குடும்ப ஆட்சியே நடக்கிறது. நல்ல திட்டங்கள், நாட்டின் வளர்ச்சியை மக்கள் விரும்புகின்றனர். அதனால், தென் மாநிலங்கள், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகியவை நம் கட்சியை வளர்ப்பதற்கான அடுத்த இலக்காக நிர்ணயிக்கப்படுகிறது.எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல், ஜாதி அரசியல், குறிப்பிட்ட சமூகத்துக்கு ஆதரவான அரசியலுக்கு முடிவு கட்டுவோம்.சமீபத்தில் நடந்த சட்டசபை மற்றும் பல இடைத் தேர்தல்களில், பா.ஜ.,வுக்கு மக்கள் ஆதரவு அளித்துஉள்ளனர். இது, நம் வளர்ச்சிக்கான அரசியல் மற்றும் நம் சாதனை திட்டங்களை மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்பதை உறுதி செய்கிறது
.குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துஉள்ளது. கடந்த 2002ல் நடந்த கலவரத்துக்கும், அப்போது மாநில முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் தொடர்பு இல்லை என, சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்தது. ஆனால், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், பிரதமர் மோடிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது.
இத்தனை ஆண்டுகளாக சில கட்சிகள், சில ஊடகங்கள், சில அரசு சாரா அமைப்புகள் பொய் பிரசாரம் செய்து வந்தன. பாற்கடலில் அமிர்தத்தை கடைந்தபோது உருவான விஷத்தை தன் கழுத்தில் ஏந்தினார் ஹிந்துக் கடவுள் சிவன். அவரைப் போல, கடந்த பல ஆண்டுகளாக கூறப்பட்டு வந்த விமர்சனங்களுக்கு எந்த பதிலும் தராமல் மோடி அமைதி காத்தார்.'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை விற்பனை தொடர்பான மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராக, காங்கிரசின் சோனியா, அவரது மகன் ராகுலுக்கு 'சம்மன்' அனுப்பப்பட்டது. இதைக் கண்டித்து போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதுதான் அவர்களது அரசியல்.இது போன்ற நாடகங்கள் எதையும் நடத்தாமல், தன் மீதான வழக்கின் விசாரணைக்கு மோடி ஆஜரானார். அவர் அரசியல் சாசனத்தை மதிக்கத் தெரிந்தவர்.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமித் ஷா பேசியது தொடர்பாக, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விளக்கினார். நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:ராஜஸ்தானின் உதய்பூரில் டெய்லர் கன்னையா லால், தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விவாதிக்கவில்லை. அதுபோல, முஸ்லிம் மதத்தை விமர்சித்து முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுாபுர் சர்மா கூறிய கருத்து மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னைகள் குறித்தும் செயற்குழுவில் விவாதிக்கவில்லை.குறிப்பிட்ட சில சம்பவங்கள் குறித்து செயற்குழுவில் பொதுவாக நாங்கள் விவாதிப்பதில்லை. ஜாதி அரசியல், குறிப்பிட்ட சமூகத்தினரை திருப்திபடுத்தும் அரசியலை ஒழிப்போம் என்று அமித் ஷா கூறியுள்ளார். அதுவே இதற்கு பதில்.இவ்வாறு அவர் கூறினார்.
![]()
|
தேசிய செயற்குழுவில், 450க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு விதவிதமான உணவு வகைகளுக்கு, மாநில பா.ஜ., தலைவரும், கரீம்நகர் எம்.பி.,யுமான பண்டி சஞ்சய் ஏற்பாடு செய்திருந்தார்.பிரபல சமையல் கலைஞர் யாதம்மா தலைமையிலான குழு, 50 விதமான பண்டங்களை தயாரித்தது. குறிப்பாக தெலுங்கானாவில் பிரபலமான பிரியாணி, உருளைக்கிழங்கு குருமா, காரசாரமான புளியோதரை, ஆவக்காய் ஊறுகாய் என சமைத்து தள்ளினர்.
ஹைதராபாதில் உள்ள சர்வதேச மாநாட்டு அரங்கில் நடந்த செயற்குழு கூட்டத்தில், கட்சிப் பிரமுகர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், மாநில உளவுத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி, போலீஸ் அதிகாரிக்கான, 'பேட்ஜ்' உடன் அரங்குக்குள் வந்ததாக கூறப்படுகிறது. அவரைப் பிடித்து, உளவுத் துறையிடம் ஒப்படைத்தனர்.கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு தீர்மானத்தை, அவர் தன் மொபைல் போனில் படம்பிடித்ததாக, மாநில முன்னாள் எம்.எல்.ஏ., இந்திரசேனா ரெட்டி கூறியுள்ளார்.
ஹைதரபாதின் சார்மினார் அருகே அமைந்து உள்ள பாக்கியலட்சுமி கோவிலில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று வழிபட்டார். கடந்த 2020ல் ஹைதராபாத் மாநகராட்சிக்கு நடந்த தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது, இந்தக் கோவிலுக்கு செல்ல நினைத்தார். ஆனால், நேரம் கிடைக்கவில்லை.பா.ஜ., செயற்குழுவில் பங்கேற்க வந்துள்ள அவர், அந்தக் கோவிலுக்குச் சென்று நேற்று வழிபட்டார்.