வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை---'போக்சோ' சட்டத்தில் கைதான, சென்னை முகப்பேர் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர், அரசின், 'நீட்' பயிற்சி மற்றும் தனக்கான முக்கிய பதவிகளின் பெயரில் மிரட்டி, மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை முகப்பேர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் வேதியியல் ஆசிரியர் ஸ்ரீதர் ராமசாமி சமீபத்தில், இவர் போக்சோ சட்டத்தில் கைதானார். இவர் மீது, குழந்தைகள் நல பாதுகாப்பு கமிஷனில், அடுக்கடுக்காக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடனும், 'வாட்ஸ் ஆப்' உரையாடல் விபரங்களுடனும், மாணவியர் பலர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிஉள்ளன.
அதன் விபரம்:ஆசிரியர் ஸ்ரீதர் ராமசாமி, பள்ளியில், பிளஸ் 2 வகுப்பாசிரியராக இருந்து உள்ளார். பொதுவாக, பெண்கள் மேல்நிலை பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் பணியாற்றவும், வகுப்பாசிரியராக செயல்படவும் அனுமதி கிடையாது. ஆனால், தன் போலி ஒழுக்கத்தை காட்டி, வகுப்பாசிரியர் என்ற பதவியில் மறைந்து சேட்டைகள் செய்துள்ளார்.
நற்பெயர்
அரசின், 'நீட்' இலவச பயிற்சி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்; மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பாடத்திட்ட குழு ஆசிரியர்; சமக்ர சிக் ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்ட வீடியோ பாட தயாரிப்பு குழுவின் ஆசிரியர் உள்ளிட்ட பதவிகளில் இருந்துள்ளார்.ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாநில இயக்குனர் சுதனிடம், நற்பெயர் பெற்ற ஆசிரியர்களில் ஒருவராகவும் திகழ்ந்துஉள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மருத்துவ கல்வி இயக்குனரகம் ஆகியவற்றிலும், தன்னை கல்வி சேவை செய்ய வந்த மகான் போல காட்டிக் கொண்டுஉள்ளார். இதனால், பள்ளிக்கல்வி துறையின் உண்டு, உறைவிட நீட் பயிற்சி முகாமின், 'எலைட்' ஆசிரியர் குழுவிலும் இடம் பிடித்துள்ளார்.
'நீட்' பயிற்சி
இந்த பதவிகளை பயன்படுத்தி, நீட் பயிற்சிக்கு வரும் மாணவியரிடம், தமிழக அரசின், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் வாங்கித் தருகிறேன்; தனியார் கல்லுாரிகளில் கட்டணமின்றி பட்டப் படிப்புக்கு, 'சீட்' வாங்கி தருகிறேன்;நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க, பயிற்சி புத்தகங்கள், மாதிரி வினாத்தாள் தருகிறேன் என்று கூறி, தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பிளஸ் 2 வேதியியல் செய்முறை தேர்வுக்கு, பதிவேட்டை கொண்டு வரும் மாணவியரிடமும், மதிப்பெண் அதிகம் தருவதாக மனதை மயக்க முயற்சித்து உள்ளார்.அரசின் நீட் பயிற்சியாளராக இருந்ததால், அதற்கென, 'வாட்ஸ் ஆப்' குழு அமைப்பது போல, மாணவியரிடம் இரவிலும் சாட் செய்வது, பயிற்சிக்கு வரும் மாணவியரின் அருகில் நின்று செல்பி எடுத்து, 'ஸ்டேட்டஸ்' வைப்பது என்று, தன்னை அரசு பள்ளி மாணவியரின் கதாநாயகனாக சித்தரித்துஉள்ளார். சில ஆண்டுகளாகவே, இந்தப் பிரச்னையை மாணவியர் வெளியே சொல்ல தயங்கி உள்ளனர்.
'டூ வீலர்' அனுபவம்
இந்நிலையில், கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவியர் சிலரை, டூ வீலரில் பின் இருக்கையில் அமர வைத்து தனியாக அழைத்து செல்வது; வேகத்தடைகளில் டூ வீலரின் வேகத்தை அதிகரிப்பது. தன்னை ரோமியோவாக நினைத்து, மாணவியரிடம் தன்னுடனான டூ வீலர் பயண அனுபம் குறித்து கேட்பது; மாணவியரின் உடல் அமைப்பு குறித்து ஆபாசமாக பேசுவது. வாட்ஸ் ஆப்பில் மயக்கும் வார்த்தைகளுடன் உரையாடுவது என, ஸ்ரீதரின் மன்மத வித்தை அதிகரித்துள்ளது.கடைசியாக பிளஸ் 2 தேர்வுக்கு பின், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்படி, சில மாணவியரை தன் வீட்டுக்கே அழைத்து அத்துமீறி உள்ளார். ஆனால், மாணவியர் அவரது ஆசைக்கு மயங்காமல், பிரச்னையை சரியாக புரிந்து, அங்கிருந்து தப்பித்துள்ளனர். இதற்கு மேலும் தாமதித்தால் பிரச்னை பெரிதாகி விடும் என நினைத்த மாணவியர், தங்கள் பெற்றோரிடம் விஷயத்தை கொட்டிஉள்ளனர்.
இதையடுத்து, பிளஸ் 2 தேர்வு முடிவு வரும் வரை காத்திருந்து, தங்கள் பெற்றோரின் உதவியுடன்,குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் வழியே, ஆபாச ஆசிரியர் ஸ்ரீதரை கம்பி எண்ண வைத்துஉள்ளனர்.இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. தற்போது, 'சஸ்பெண்ட்' ஆகியுள்ள ஆசிரியர் ஸ்ரீதரை உதாரணமாக எடுத்து, அரசு பள்ளிகளிலும், நீட் பயிற்சி மையங்களிலும், டி.பி.ஐ., வளாகத்திலும் சுற்றும் மன்மத ராஜாக்கள் மீது, பள்ளிக்கல்வி அதிகாரிகள் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.