சென்னை--திருவல்லிக்கேணி, தீர்த்தபாலீஸ்வரர் கோவிலில் காவலாளி பாபு, 2021 ஜூனில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
தன் கணவரின் இறப்புக்கு இழப்பீடு கோரி, பணியாளர் இழப்பீட்டு கமிஷனரிடம், பாபுவின் மனைவி ஸ்ரீதேவி மனு அளித்தார்.இந்த மனு, தொழிலாளர் இழப்பீட்டு இணை கமிஷனர்- பா.மாதவன் முன் விசாரணைக்கு வந்தது. தீர்த்தபாலீஸ்வரர் கோவில் செயல் அதிகாரியின் பதில் மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அவர் புதிய இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.அதில், 'கோவில் என்பது நிறுவனம் அல்ல; தொழில் அல்லது வர்த்தகம் செய்யும் இடமும் அல்ல; எனவே, ஸ்ரீதேவியின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல' என, குறிப்பிட்டிருந்தது.
ஸ்ரீதேவி தரப்பு வழக்கறிஞர், வி.எஸ்.சுரேஷ்:கோவிலில் பணியில் இருந்த போது தான், பாபு மரணம் அடைந்துள்ளார் என, கோவில் செயல் அதிகாரியின் பதில் மனு தெளிவுபடுத்தி உள்ளது. அதாவது, காவலாளி இறந்ததும், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து, அறநிலையத்துறை, 5 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளது. இறந்த நபர் அறநிலையத்துறை பணியாளர் என்பது உறுதியாகி உள்ளது.திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் வழக்கில், கோவில் என்பது நிறுவனமே என, உயர் நீதிமன்ற மதுரை கிளை, 2014ல் தெரிவித்துள்ளது.இவ்வாறு வாதிட்டார்.
தொழிலாளர் இணை கமிஷனர் மாதவன் பிறப்பித்த உத்தரவு:கோவில் பணியாளர்கள் பணிக்கொடை சட்டத்தின் கீழ் தான் வருகின்றனர் என, சுப்ரீம் கோர்ட், 1981ல் தெளிவுபடுத்தி உள்ளது. கோவில் என்பது நிறுவனம் தான்.கோவில் செயல் அதிகாரி தரப்பில், கோவில் நிறுவனம் அல்ல என்று தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு ஏற்கக்கூடியதல்ல. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்கு விசாரணை வரும், 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு கமிஷனர் உத்தரவிட்டார்.