கோவை:ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வரும், 20ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை கலெக்டர் சமீரன் அறிக்கை:ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையம் பிரத்யேகமாக பழங்குடியினருக்காக ஆரம்பிக்கப்பட்டது.
இந்த உண்டு, உறைவிட தொழிற்பயிற்சி நிலையத்தில், 2022ம் கல்வியாண்டுக்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது; வரும், 20ம் தேதி கடைசி நாளாகும்.இதில், பிட்டர், எலக்ட்ரீசியன், எம்.எம்.வி., ஒயர்மேன், வெல்டர் ஆகிய தொழிற் பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற் பிரிவுகளில் சேர்க்கை நடக்கிறது.
பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பத்தை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் உரிய ஆவணங்களுடன் ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஆண்களுக்கு வயது வரம்பு, 14 முதல், 40 வரையும், மகளிருக்கு, 14 முதல் என உச்ச வயது வரம்பு இல்லை;
பயிற்சி முற்றிலும் இலவசம். அனைத்து பயிற்சியாளர்களுக்கும் பஸ் பாஸ், பிரதி மாதம் வருகை அடிப்படையில் கல்வி உதவித்தொகை, 750 ரூபாய், விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வரைபட கருவிகள், லேப்டாப் வழங்கப்படும்.அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். இடவசதியை பொருத்து உணவு, தங்கும் விடுதி இலவசமாக வழங்கப்படும். விபரங்களுக்கு, 89408 37678, 94421 75780, 99651 03597, 94860 74384 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.